Advertisment

பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள்: லோக்சபாவில் அறிவித்த சலுகைகள் இவைதான்!

மக்களவையில் வியாழக்கிழமை “தன்னார்வ வணிக மற்றும் பொதுத்துறை வாகனங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை” அறிவித்த நிதின் கட்கரி, 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேலான தனிநபர் வாகனங்கள் சோதனையில் தேர்ச்சி பெறத் தவறினால் அவற்றை அகற்றுவதற்கு குறிக்கப்பட்டு, அந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
new scrapping policy, vehicles, Voluntary Vehicle-Fleet Modernisation Programme, புதிய வாகன கழிவுக் கொள்கை, பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கை, union minister nitin gadkari, lok sabha, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியா கட்டாய வாகன தகுதி பரிசோதனையின் மூலம் புதிய சுற்றுச்சூழல் அமைப்பதை உறுதி செய்யும். பழைய வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Advertisment

அதே நேரத்தில், பழைய வாகனங்களை கழிவுக்காக விட்டுக் கொடுப்பவர்களுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதில் 5 சதவீத தள்ளுபடி செய்ய பரிசீலிக்கவும் ஜிஎஸ்டியில் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் வாகன தயாரிப்பாளர்களை அணுகும் என்று நிதின் கட்கரி கூறினார்.

மக்களவையில் வியாழக்கிழமை “தன்னார்வ வணிக மற்றும் பொதுத்துறை வாகனங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை” அறிவித்த நிதின் கட்கரி, 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேலான தனிநபர் வாகனங்கள் சோதனையில் தேர்ச்சி பெறத் தவறினால் அவற்றை அகற்றுவதற்கு குறிக்கப்படும் என்று கூறினார். “அந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த கொள்கையின் முக்கியத்துவம், தகுதியில்லாத வாகனங்களின் வாழ்நாள் முடிந்தது என்று குறிப்பிடுவதன் மூலம் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும். அதே நேரத்தில், இது அத்தகைய வாகனங்களை அழிக்கும் செயல்முறைக்கு அனுப்பப்படும் சூழலை ஊக்குவிக்கிறது.

புதிய ஒழுங்குமுறை சட்டம், தூய்மையான உமிழ்வு, எரிபொருள் செயல்திறன் மற்றும் சிறந்த பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டது. ஏப்ரல் 2023 முதல் கனரக வணிக வாகனங்களை கட்டாயமாக சோதனை செய்யத் தொடங்கப்படும். பிற வாகன வகைகளுக்கான சோதனை ஒரு கட்டமாக ஜூன் 2024 முதல் தொடங்கப்படும்.

இது ஏப்ரல், 2022 முதல் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களுக்கும் இது பொருந்தும். பொதுத்துறை வாகனங்கள் விஷயத்தில், நிதின் கட்கரி கூறுகையில், “15 வயதுக்கு மேற்பட்ட வாகனங்கள் கட்டாயமாக அகற்றப்படும். வாகனத் தகுதி சோதனையை பரிசீலிக்காமல் குறைந்தது 2.37 லட்சம் வாகனங்கள் உள்ளன” என்று கூறினார்.

இந்த கொள்கையிலிருந்து பழங்கால (Vintage) வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய நிதின் கட்கரி, அவற்றை ஒழுங்குபடுத்த தனி வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும் என்றும் கூறினார்.

“இந்த சுற்றுச்சூழல் அமைப்பு சுமார் 10,000 கோடி ரூபாய் மற்றும் 35,000 வேலை வாய்ப்புகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இதேபோன்ற முயற்சிகளைப் பற்றி ஆய்வு செய்த பின்னர் இந்த புதிய அரசுக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கொள்கையின்படி, இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த வாகன அழிப்பு வசதிகளை - பதிவுசெய்யப்பட்ட வாகன அழிப்பு வசதிகள் (ஆர்.வி.எஸ்.எஃப்) அமைப்பதை அரசாங்கம் ஊக்குவிக்கும். அடையாளம் காணப்பட்ட இடங்களில் குஜராத்தில் அலாங் இடங்களும் அடங்கும். அங்கே மிகவும் சிறப்பு வாய்ந்த வாகன அழிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கொள்கையின் முக்கிய அம்சம், புதிய அமைப்பை நோக்கி பயனர்களைத் தூண்டுவதற்கான தொடர் நடவடிக்கையில் ஊக்கம் இழக்கச் செய்யும் விதமாக, “பதிவு செய்யப்பட்ட ஆரம்ப நாளில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு வணிக வாகனங்களுக்கு வாகன தகுதிச் சான்றிதழ் மற்றும் வாகனத் தகுதி சோதனைக்கான அதிகரிக்கப்பட்ட கட்டணம் பொருந்தும்” என்று நிதின் கட்கரி கூறினார்.

இந்த வாரம் வெளியிடப்பட்ட வரைவு அறிவிப்பில், அனைத்து வாகனங்களின் மறு பதிவு கட்டணங்களும் வாகனத்தின் வகையைப் பொறுத்து 8 முதல் 20 மடங்கு வரை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் இந்த ஆண்டு அக்டோபர் முதல் அமலுக்கு வரும்.

மற்றொருபுறம், ஒரு பழைய வாகனம் சான்றிதழின் அடிப்படையில் அகற்றப்பட்ட பின்னர், புதிய வாகனம் வாங்குவதற்கு 5% தள்ளுபடி வழங்க வாகன தயாரிப்பாளர்களுக்கு அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கும். மேலும், நிதின் கட்கரி ஜிஎஸ்டியில் தள்ளுபடிக்கு அழுத்தம் கொடுக்கிறார். “மத்திய மாநில அரசின் ஜி.எஸ்.டி மீது சில தள்ளுபடிகள் வழங்குமாறு நான் நிதி அமைச்சரிடம் கோரியுள்ளேன். முடிவு முற்றிலும் அவர்களுடையது” என்று கூறினார்.

வாகன அழிப்பு சான்றிதழ்களை அளிப்பவர்களுக்கு, அவர்கள் புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கவும், பதிவு கட்டணத்தை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பழைய வாகனத்தை கழிவுக்கு அனுப்பிவிட்டு ஒரு புதிய வாகனத்தை வாங்குவதற்கான நிதி ஊக்கத்தொகை 15 ஆண்டுகள் ஆன தனிப்பட்ட வாகனத்தின் இயங்கும் செலவைவிட அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். புதிய வாகனத்தின் விலையில் வாகன அழிப்பு மதிப்பு 4-6 சதவீதமாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

“பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைவிட நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் முன்னுரிமை பெறுமா என்பது குறித்து நாங்கள் இந்த விஷயத்தில் சட்டபூர்வமான கருத்தை பெறுவோம். என்னுடைய கருத்தும் அதுவே. கடந்த காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. வாகன கழிவுக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதாகும். எனவே, இந்த கொள்கை டெல்லிக்கும் பொருந்தும்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த கொள்கை “யாருக்கும் தண்டனையானது அல்ல” என்று நிதின் கட்கரி கூறினார். “ஏழைகளும் நடுத்தர மக்களும் என்ன செய்வார்கள் (தங்கள் வாகனங்களை அழித்த பிறகு) போன்ற சில பேச்சு உள்ளது. புதிய வாகனங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பாக பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், சிறந்த மைலேஜையும் வழங்குகின்றன. எனவே, இது அனைவருக்கும் ஒரு நன்மை” என்று நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறினார். “இது ஏழைகளுக்கு எதிரான கொள்கை அல்ல. இதன் மூலம் அனைவரும் பயனடைய உள்ளார்கள்.” என்று கூறினார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆர்.வி.எஸ்.எஃப் அமைப்பதற்கான விதிகளின் வரைவு அறிவிப்பை வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. எந்தவொரு சட்ட நிறுவனமும் அத்தகைய வசதியை 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் உரிமத்துடன் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க முடியும். விண்ணப்பங்களுக்கான செயலாக்க கட்டணம் தலா ரூ .1 லட்சம் மற்றும் வங்கி உத்தரவாதத்துடன் ரூ .10 லட்சம் ஆகும். திருடப்பட்ட வாகனங்கள் அல்லது பிற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வாகனங்களைக் கண்காணிக்க இந்த மையங்கள் போலீஸ் மற்றும் தேசிய தரவுத்தளங்களுடன் இணைக்கப்படும்.

இதேபோல், தனியார் பங்கேற்பு மூலம் தானியங்கி வாகனத் தகுதி சோதனை மையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது இந்தியா முழுவதும் குறைந்தது 718 மையங்களை அமைப்பதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சகம் 26 மாதிரி மையங்களை அனுமதித்துள்ளதுடன், தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக இலவசமாக நிலங்களை ஒதுக்குமாறு மாநிலங்களை கோரியுள்ளது.

இந்த சோதனை செயல்பாட்டில் எந்தவொரு தனிமனித தலையீடும் இல்லாம திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தானியங்கி மையங்களில் ஒரு சோதனைக்கு சுமார் 1,200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சகம் குறிப்பிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 51 லட்சம் லகு ரக மோட்டார் வாகனங்கள் உள்ளன. அவை 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை. 15 ஆண்டுகளுக்கு மேல் 34 லட்சம் வாகனங்கள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுமார் 17 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்கள் சரியான தகுதிச் சான்றிதழ்கள் இல்லாமல் இருக்கின்றன என்று இந்த தரவுகள் குறிப்பிடுகின்றன.

India Minister Nitin Gadkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment