முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நீரவ் மோடி

இண்டர்போல், சிபிஐ அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி மார்ச் 15, 28, 30, மற்றும் 31ம் தேதிகளில் அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நீரவ் மோடி பயணித்துள்ளார்

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி தன்னுடைய முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி மார்ச் மாதத்தில் மட்டும் நான்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய வைர வியாபாரி மற்றும் அவருடைய உறவினர் இருவரின் பாஸ்போர்ட்டினையும் முடக்கியது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம். நீரவ் மோடி மற்றும் அவருடைய தாய் மாமன் மெஹுல் சோக்ஷி இருவருக்கும் பிப்ரவரி 16ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனிற்கு பதில் எதுவும் வராத நிலையில் இருவருடைய பாஸ்போர்ட்டுகளும் பிப்ரவரி 24ம் தேதி முடக்கப்பட்டது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கப்பட்டதாக அறிந்த அந்த வங்கி நிர்வாகம் நீரவ் மோடியின் நிறுவனங்களின் மீது வழக்கு தொடுத்தது. போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பயன்படுத்தி சுமார் ரூ. 13,500 கோடி வரை மோசடி செய்திருக்கின்றது இவருடைய நிறுவனங்கள்.

இந்த மோசடி குறித்து தகவல் வெளிவருவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே நீரவ் மோடி தன்னுடைய மனைவி அமி, சகோதரர் நீசல் மற்றும் சோக்ஷி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்கிக் கொள்ள ஏற்பாடுகளை செய்து வந்திருக்கின்றார் நீரவ் மோடி. இந்நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்திலும், சோக்ஷி அமெரிக்காவிலும் இருப்பது உறுதி செய்யபட்டது. நீரவ் மோடியினை கைது செய்ய இந்தியா, இண்டெர்போலின் உதவியை நாடியிருக்கின்றது. இங்கிலாந்தின் அமைச்சர் பரோனஸ் வில்லியம்ஸ், நீரவ் மோடி இங்கிலாந்தில் தங்கியிருப்பதை கிரண் ரெஜ்ஜுவிடம் உறுதி செய்திருக்கின்றார்.

நீரவ் மோடி அந்த முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி, அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஹாங்காங் சென்று வந்துள்ளதாக இண்டர்போல் அதிகாரிகள் இந்திய ஏஜெண்ட்களிடம் தகவல் அளித்திருக்கின்றார்கள். இண்டர்போல், சிபிஐ அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி மார்ச் 15, 28, 30, மற்றும் 31ம் தேதிகளில் அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நீரவ் மோடி பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.

×Close
×Close