Advertisment

கூட்டணி சர்ச்சை: ராகுலுடன் நிதிஷ் சந்திப்பு; பிரதமரையும் சந்திக்க திட்டம்

பிகார் மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
கூட்டணி சர்ச்சை: ராகுலுடன் நிதிஷ் சந்திப்பு; பிரதமரையும் சந்திக்க திட்டம்

பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சர்ச்சை நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்துள்ளார். அதேபோல், பிரதமர் மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார்.

Advertisment

பிகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக-வை வீழ்த்தியது.

ஐக்கிய ஜனதாதளத்தின் நிதிஷ்குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் உள்ளனர். கூட்டணி ஆட்சி பதவியேற்றது முதலே, நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவுக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த சூழலில், தேஜஸ்வியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பினாமி சொத்துகள் இருப்பதாகக் கூறி ஆவணங்களையும் கைப்பற்றின. அதேபோல், லாலுவின் வீடு, அவரது மக்கள் மிசா பாரதி மற்றும் அவரது கணவரது வீடு அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையையடுத்து, பிகார் மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

லாலு மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகளால் நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால், தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சும் நிதிஷ், லாலுவுடனான உறவை துண்டிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. "என்னுடைய கொள்கையில் எப்போதுமே சமரசத்துக்கு இடம் இல்லை. ஊழலுக்கு எதிரான நிலை என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை" என நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மத்திய அரசின் "அரசியல் பழிவாங்கல்"-ல் தாம் சிக்கிக் கொண்டுள்ளதாக லாலு குற்றம் சாட்டியுள்ளார். லாலுவின் குரலுக்கு காங்கிரஸ் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது. அதேபோல், லாலுவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் நிதிஷ்குமாருக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்போம் என அம்மாநில பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல், பணமதிப்பிழக்க நடவடிக்கை, சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவளித்த நிதிஷ்குமார், குடியரசுத்தலைவர் தேர்தலிலும் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. ராம்நாத் கோவிந்துக்கு அவர் ஆதரவளித்தது கடும் விமர்சனதுக்குள்ளானது. மேலும், பிகார் மாநில காங்கிரஸார் நிதிஷ்குமாரை கடுமையாக சாடி வந்தனர்.

ஆனால், நிதிஷ்குமாரைப் பற்றி காங்கிரஸ் சார்பில் யாரேனும் கடுமையாக பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரிக்கை விடுத்தார். இது மீண்டும் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. இருப்பினும், பாஜக-வுடன் கைகோர்க்க நிதிஷ்குமார் விரும்புவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், டெல்லி சென்றுள்ள பிகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து, பிரதமர் மோடியையும் நிதிஷ்குமார் சந்திக்கவுள்ளார். குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிந்து அவர் விடை பெறுவதால், பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த விருந்தை பெரும்பாலான எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணிக்கவுள்ளார்கள். ஆனால், எதிர்க்கட்சி முதல்வரான நிதிஷ்குமார் மட்டும் இந்த விருந்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bjp Nitish Kumar Bihar Jd U
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment