”பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை”: நிதி அமைச்சகம்

மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள அண்ணச்சத்திரங்களில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவுகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் இலவச உணவுகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் செவ்வாய் கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள அண்ணச் சத்திரங்களில் வழங்கப்படும் இலவச உணவுகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில், எந்தவித உண்மையும் இல்லை. இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பொருந்தாது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தர்க்காக்கள், குருதுவாராக்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இல்லை.

இருப்பினும், வழிபாட்டுத் தலங்களில் உணவு வகைகள் செய்வதற்கான சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள், அவற்றைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு இவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டுள்ளதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ஒரே வரி ஒரே கொள்கை எனும் கொள்கையின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மத்திய பா.ஜ.க. அரசால் நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அவசரகதியில், முழுமையானதாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு செயல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில், ஏ.சி. அல்லாத உணவகங்களுக்கு 12% வரிவிதிப்பும், ஏசி உணவகங்களுக்கு 18% வரிவிதிப்பும் விதிக்கப்பட்டது. இதனால், உணவகங்களில் அதிக கட்டணம் கொடுத்து உணவு உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், “உணவகங்களில் சாப்பிட முடியாவிட்டால் வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்”, என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் இலவச உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close