”குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது”: பா.சிதம்பரம் கடும் தாக்கு

”குஜராத் மாநில சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை பேரணியில் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது”

குஜராத் மாநில சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை பேரணியில் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என, முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவை மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை இரண்டின் பதவிக்காலமும் வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேச சட்டப்பேர்வை தேர்தல் தேதிகளை மட்டும் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நடத்தை விதிமுறைகள் அம்மாநிலங்களில் உடனடியாக அமலாகிவிடும் எனவும், அதனால், அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்பதாலேயே, குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என கூறினார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது, குஜராத் பாஜக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சாதாகமாக அமையும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்கள் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஒய்.குரேஷி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம், ”குஜராத் மாநில சட்டப்பேரவையின் தேர்தல் தேதியை பேரணியில் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது”, எனவும், “சலுகைகள் மற்றும் இலவசங்களை அறிவித்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது”, எனவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெருவித்திருந்தார்.

×Close
×Close