பாக். தீவிரவாதிகள் இந்தியாவை தாக்கும் ஆபத்து : அமெரிக்க உளவு தலைவர் எச்சரிக்கை

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவை தொடர்ந்து தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவை தொடர்ந்து தாக்கும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அடுத்தடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அண்மையில் ஜம்முவில் சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். அதேபோல பிப்ரவரி 12-ம் தேதி ஸ்ரீநகரின் கரன் நகர் ஏரியாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமை தீவிரவாதிகள் தாக்க முயன்றதில், மத்திய படை வீரர் ஒருவர் பலியானார்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் இது போன்ற தாக்குதல்கள் இன்னும் தொடரும் என்கிற அதிர்ச்சி தகவலை அமெரிக்க உளவு அமைப்பின் நிர்வாகி தெரிவித்துள்ளார். ‘உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த மதிப்பீடு’ என்ற தலைப்பில் வாஷிங்டனின் நடைபெற்ற விசாரணை நிகழ்வு ஒன்றில் அமெரிக்காவின் தேசிய உளவுப் பிரிவு இயக்குனர் டான் கோட்ஸ் பேசுகையில், ‘இஸ்லாமாபாத் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான தளமாக இருக்கிறது. இதன் மூலமாக அமெரிக்காவின் விருப்பங்களுக்கு எதிராக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும் அதற்கான திட்டங்களை வகுக்கவும் அவர்களால் முடிகிறது. இந்த அனுகூலத்தை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார் டான் கோட்ஸ்.

டான் கோட்ஸ் மேலும் கூறுகையில், ‘அணு ஆயுத தளவாடங்களை குவிப்பது, தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணுவது, தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பை குறைத்துக் கொள்வது, சீனாவுடன் நெருங்குவது என அமெரிக்காவின் விருப்பங்களுக்கு மிரட்டல் விடுப்பதை பாகிஸ்தான் தொடர்ந்து செய்யும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நீடிக்கவே செய்யும். இந்தியா மீது இன்னொரு வலுவான தீவிரவாத தாக்குதல் நடப்பதன் மூலமாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் தொடர்ந்து வன்முறை நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்றார் டான் கோட்ஸ்.

 

×Close
×Close