கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரின் முதல் பகுதியில் பிப்ரவரி 1-ந் தேதி நிதியமைச்சர் அருண்ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்பு, இந்த கூட்டத்தொடர் இருகட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 6-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
முதல் நாளான நேற்று, காவிரி விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த மோசடி ஆகிய விவகாரங்களை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், கடுமையாக அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இன்று இரண்டாவது நாள் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆனால், இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த Live Updates இங்கே,
பிற்பகல் 03.40 – மாநிலங்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 03:00 – மாநிலங்களவை பிற்பகல் 3.30 வரை ஒத்திவைப்பு.
பிற்பகல் 12:46 – இரண்டாவது நாளாக மக்களைவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி பற்றி உடனே விவாதிக்க மக்களவையில் வலியுறுத்தப்பட்டு முழுக்கம் எழுந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
காலை 11:56 – மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த முறைக்கேடு பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காலை 11:50 – ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 11:11 – மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியால் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பு.
காலை 11:07 – பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிரவ் மோடியை பாஜக அரசு பாதுகாப்பதாக கூறி, காங்கிரஸ் எம்.பிக்கள் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரவ் மோடி, விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.