மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

மழைக்காலக் கூட்டத்தொடரில் புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஆளுங்கட்சியும், முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில், புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய ஆளுங்கட்சியும், முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று அண்மையில் காலமான மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே, காங்கிரஸ் உறுப்பினர் பல்வை கோவர்த்தன் ரெட்டி, பாஜக உறுப்பினர் வினோத் கன்னா ஆகியோருக்கு இரு அவைகளிலும் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்துவர். இதையடுத்து, நடவடிக்கைகள் ஏதும் இன்றி இன்றைய கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படும். நாளை முதல் இரு அவைகளும் வழக்கம் போல் செயல்படும்.

இன்று கூடும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 19 அமர்வுகளாக வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடந்தது. இதையடுத்து, மழைக்காலக் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. முன்னதாக, ஜிஎஸ்டி வரி அறிமுக விழாவுக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடியது என்பது கவனிக்கத்த்கது.

இந்த கூட்டத்தொடரில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன சட்டதிருத்தம், அசையா சொத்துகள் ஒழுங்குமுறை மற்றும் கையகப்படுத்தும் சட்டதிருத்தம், குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டதிருத்தம், மோட்டார் வாகன சட்டதிருத்தம் என்பன உள்ளிட்ட 18 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதேபோல், அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல், காஷ்மீர் பிரச்னை, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கம், விவசாயிகள் பிரச்னை, சீனாவுடனான எல்லை பதற்றம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல், பசு பாதுகாவலர்கள் என்ற அரங்கேற்றப்படும் கொலைகள், கூர்காலாந்து தனி மாநில போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், வழக்கம் போல், அமளிகளுக்கு பஞ்சமிருக்காது.

×Close
×Close