”பிரதமர் கேட்டுக்கொண்டதாலேயே சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்”: சுஷ்மா

“பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மற்றும் அதிபரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் 42 படகுகள் மற்றும் 251 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது”

By: August 3, 2017, 5:31:03 PM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து இலங்கை பிரதமர் மற்றும் அதிபரிடம், பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தான் 42 படகுகள் மற்றும் 251 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மத்திய அரசு அதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மற்றும் அதிபரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான் 42 படகுகள் மற்றும் 251 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது”, என தெரிவித்தார்.

மேலும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பிலும் மத்திய அரசு கவனமாக இருப்பதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் மோடி இலங்கை அதிகாரிகளிடம் தனிப்பட்ட ரீதியில் கேட்டுக்கொண்டதால் அவர்கள் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் சுஷ்மா நாடாளுமன்றத்தில் கூறினார்.

இலங்கை கடற்படையினரால் வெவ்வேறு காலக்கட்டங்களில் கைது செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக இலங்கை அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Parliament monsoon session sushma swaraj on fishermen detained in sri lanka says matter raised in each meeting between both countries

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X