மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் : அமளியால் இரு அவைகளும் ஒரு நாள் தள்ளிவைப்பு

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நாடு முழுவதும் கவனத்தை பெற்றது. எனினும் நரேந்திர மோடி அரசுக்கு இதனால் ஆபத்து இல்லை.

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நாடு முழுவதும் கவனத்தை பெற்றது. எனினும் நரேந்திர மோடி அரசுக்கு இதனால் ஆபத்து இல்லை.

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பதே தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கை. இந்த பிரச்னையை முன்வைத்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் தெலுங்கு தேசம் விலகியது.

மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் இது தொடர்பாக நோட்டீசும் அளித்தது. ஆனால் அன்று சபையில் காவிரி வேளாண்மை வாரியம் அமைக்கக் கோரி அ.தி.மு.க. எம்.பி.க்களும், முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 50 எம்.பி.க்களின் தலைகளை கணக்கிட முடியவில்லை என்று கூறி சபாநாயகர் சபையை 19-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

மக்களவையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெலுங்கு தேசம் அறிவித்தது. நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 5-ந்தேதி தொடங்கி இதுவரை 10 நாட்கள் நடந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக சில மணிநேரம் கூட நடைபெறாமல் இரு அவைகளும் முடங்கின. இந்தநிலையில் 2 நாள் விடுமுறைக்கு பின்பு இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50 எம்.பி.க்களின் கையெழுத்தை பெற்று தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வருகிறது. இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தொடர்பான LIVE UPDATES

பகல் 12.20 : நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ‘நாங்கள் முதல் நாளில் இருந்தே காவிரி பிரச்னைக்காக அவையை முடக்கி வைக்கிறோம். அவர்கள் இப்போதுதான் ஆந்திரா பிரச்னையை கொண்டு வருகிறார்கள். எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதலில் எங்கள் பிரச்னைக்கு ஆதரவு தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவர்கள் பிரச்னையை பார்க்கலாம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்கிற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது நாங்கள் போராட்டத்தை கைவிட்டால், எங்கள் கோரிக்கையை விட்டுவிட்டதாக கூறுவார்கள்’ என்றார்.

பகல் 12.15 : 11-வது நாளாக எந்த அலுவலும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது.

பகல் 12.10 : ‘உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் சபையை நடத்த முடியாது’ என கூறிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், லோக்சபாவையும் நாளை(20-ம் தேதி)-க்கு ஒத்தி வைத்தார்.

பகல் 12.05 : உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதத்தை நாங்கள் விரும்புகிறோம். எனவே உறுப்பினர்கள் அமைதி காத்து அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்’ என கூறினார்.

பகல் 12.00 : மீண்டும் லோக்சபா கூடியதும் மீண்டும் அதிமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினர்.

பகல் 11.45 : தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரியும் அதில் கலந்து கொண்டார். காவிரி பிரச்னைக்காக அதிமுக எம்.பி.க்களும் தனியாக போராட்டம் நடத்தினர்.

பகல் 11.40 : ‘மக்களின் நம்பிக்கையை மோடி அரசு எப்போதோ இழந்துவிட்டது. நாடாளுமன்றம்தான் அதை இனி உறுதிப்படுத்த வேண்டும்’ என இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜா கூறினார்.

பகல் 11.30 : நாடாளுமன்றத்தில் அரசுக்கு தேவையான பலம் இருப்பதாகவும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறினார்.

பகல் 11.10 : ராஜ்யசபாவில் அதிமுக, தெலுங்கு தேசம் எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக நாளை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.

பகல் 11.00 : மக்களவை கூடியதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி அதிமுக எம்.பி.க்கள் வழக்கம்போல கோஷம் எழுப்பினர். தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உறுப்பினர்களும் அவரவர் மாநில பிரச்னைகளை கிளப்பினர். இதனால் பகல் 12 மணி வரை லோக்சபாவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.

 

 

×Close
×Close