நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: வங்கி மோசடி, கார்த்தி சிதம்பரம் கைது பிரச்னைகளில் அனல்

கார்த்தி சிதம்பரம் குறித்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாத விடுமுறைக்கு பின்பு, நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று(5.3.18) கூடுகிறது. இதில் வங்கி மோசடி குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வாக துவங்கும் இந்த கூட்டத்தொடரில். மத்திய அரசு முக்கிய சட்டங்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரின் முதல் பகுதியில் பிப்ரவரி 1-ந் தேதி நிதியமைச்சர் அருண்ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்பு, இந்த கூட்டத்தொடர் இருகட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 9-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நட்டைபெற்று வந்தது. அதன் பின்பு, ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டு இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் வங்கி மோசடி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் குறித்த பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வங்கி மோசடி குறித்து பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதன் எதிரொலி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதிபலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்து, மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க, காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற  கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close