பெட்ரோல் - டீசல் விலை புதிய உச்சம் : கர்நாடக தேர்தல் முடிந்ததும் விர்ர்..!

டீசல், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத புதிய உச்ச விலையை எட்டியிருக்கிறது. பெட்ரோல் விலை, கடந்த 51 மாதங்களில் அதிகபட்ச விலையை எட்டிப் பிடித்திருக்கிறது.

கர்நாடகா தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, 19 நாட்களுக்கு பிறகு இன்று அமல் செய்யப்பட்டது. புதிய விலை நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தினமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும் நடைமுறை அமலில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்படி தினம்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றப்படுகிறது. கடைசியாக கடந்த ஏப்ரல் 24-ம் தேதி பெட்ரோல்-டீசல் விலை மாற்றப்பட்டது. அதன்பிறகு 19 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

பெட்ரோல்-டீசல் விலையில் இப்படி மாற்றம் செய்யாததற்கு கர்நாடக தேர்தலே காரணம் என கூறப்பட்டது. கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.

பெட்ரோல் விலை இன்று (மே 14) லிட்டருக்கு 17 பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது. டீசல் விலை லிட்டருக்கு 21 பைசா உயர்ந்திருக்கிறது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. டெல்லியில் நேற்று லிட்டருக்கு ரூ74.63 ஆக இருந்த பெட்ரோல், இன்று லிட்டருக்கு ரூ74.80 ஆக உயர்ந்திருக்கிறது. டீசல் விலை ரூ65.93-ல் இருந்து ரூ66.14 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இன்று அறிவிக்கப்பட்ட விலை உயர்வு மூலமாக டீசல், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத புதிய உச்ச விலையை எட்டியிருக்கிறது. பெட்ரோல் விலை, கடந்த 51 மாதங்களில் அதிகபட்ச விலையை எட்டிப் பிடித்திருக்கிறது.

 

×Close
×Close