தலிபான்கள் தாக்குதலில் பலியான டேனிஷ் சித்திக்: உருக்கமான தகவல்கள்

ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் தானிஷ் சித்திக் ஈடுபட்டு வந்துள்ளார்.

Danish-Siddiqui

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் புலிட்சர் பரிசு பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் ஆப்கானிய பாதுகாப்புப் படையினருக்கும் தலிபானுக்கும் இடையிலான மோதல்களை படம்பிடிக்கும்போது வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.
38 வயதாகும் சித்திக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா, தெற்காசியா மற்றும் அதற்கு அப்பால் நடந்த முக்கிய செய்தி நிகழ்வுகளின் மிக மோசமான தருணங்களை படம் பிடித்து உலகறிய செய்தவர். உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதாக செய்திகள் வந்தது. இதை அப்படியே புகைப்படமாக எடுத்து வெளியிட்டவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக்.

ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் தானிஷ் சித்திக் ஈடுபட்டு வந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில் அங்கு நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்திகளாக வெளியிட்டு வந்தார்.

இந்த அனுபவங்கள் குறித்து டேனிஷ் சித்திக், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஆப்கான் படைகள் எப்படி செயல்படுகின்றன, மக்களை காக்க எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்றும் உருக்கமான செய்தியை வெளியிட்டு இருந்தார். ஆப்கான் உள்நாட்டு போர் குறித்தும் புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் ஆப்கன் சிறப்புப் படையினருடன் தங்கியிருந்த போது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் உள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் பேசிய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஒரு அறிக்கையில் பணியில் இருந்தபோது சித்திக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

டேனிஷ் சித்திகியின் உடலை சொந்த ஊர் கொண்டு வர காபூலில் உள்ள இந்திய தூதரகம் ஆப்கானிய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. சடலம் தலிபான்களால் ஐ.சி.ஆர்.சி.க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆப்கானிய அதிகாரிகள் மற்றும் ஐ.சி.ஆர்.சி உடன் ஒருங்கிணைந்து உடலை திரும்ப பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ராய்ட்டர்ஸ் தலைவர் மைக்கேல் ஃப்ரீடன்பெர்க் மற்றும் தலைமை ஆசிரியர் அலெஸாண்ட்ரா கல்லோனி கூறுகையில் “நாங்கள் அவசர அவசரமாக மேலதிக தகவல்களை நாடுகிறோம். பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். டேனிஷ் ஒரு சிறந்த பத்திரிகையாளர், அர்ப்பணிப்புள்ள கணவர் மற்றும் தந்தை மற்றும் மிகவும் விரும்பப்பட்ட சக ஊழியர். இந்த மோசமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு துணை நிற்போம் என கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Photojournalist danish siddiqui killed assignment in afghanistan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com