Advertisment

தமிழில் கேள்வி... இந்தியில் பதில்... மக்களவையில் தமிழக எம்.பி-க்கள் கொதிப்பு ஏன்?

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, கேள்வி நேரத்தின் போது பயன்படுத்தப்பட்ட மொழி குறித்து கருவூல பெஞ்சுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாதிட்ட இதுபோன்ற பல நிகழ்வுகளை மக்களவை கண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Piyush Goyal

Piyush Goyal refuses to answer DMK MP’s question in English

நீட் மற்றும் ஐஏஎஸ் கேடர் விதிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் உள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை மக்களவையில் திமுக எம்பி கேட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆங்கிலத்தில் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Advertisment

இதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமைச்சர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பதிலளிக்கலாம், “ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதிலளிக்க வேண்டும்” என்ற விதி ஏதும் இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை சபையில் தீர்ப்பளிக்குமாறு கோயல் வலியுறுத்தினார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து, கேள்வி நேரத்தின் போது பயன்படுத்தப்பட்ட மொழி குறித்து’ கருவூல பெஞ்சுகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வாதிட்ட இதுபோன்ற பல நிகழ்வுகளை மக்களவை கண்டுள்ளது.

கடந்த வாரம் கூட, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் மட்டுமே பதில் அளிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை, அமைச்சர் கோயல் ஆங்கிலத்தில் பேச மறுத்ததால், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சபாநாயகர் பிர்லா, “உங்களுக்கு மொழி பெயர்ப்பு கிடைக்கும்” என்று ஆங்கிலத்தில் சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்.

ஈரோட்டைச் சேர்ந்த திமுக எம்.பி., கணேசமூர்த்தி, அன்னிய நேரடி முதலீடு குறித்து தமிழில் துணைக் கேள்வியைக் கேட்டபோது, ​​கோயல் முதலில் மொழிபெயர்ப்பைத் தவறவிட்டார். கேள்வியை மீண்டும் கேட்குமாறு அவர் உறுப்பினரிடம் கோரினார், ஆனால் கணேசமூர்த்தி அமைச்சரை ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார். தமிழில் பேச நோட்டீஸ் கொடுத்துள்ளேன் என்றார்.

(ஆங்கிலம் அல்லது இந்தி தவிர மற்ற மொழிகளில் பேச விரும்பும் எம்.பி., மேஜை அலுவலகத்திற்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.  அதன்மூலம் ஒவ்வொரு இருக்கையிலும் வைக்கப்பட்டுள்ள ஹெட்ஃபோன்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கிடைக்கும்.)

அதற்கு பதிலளித்த கோயல், “நான் விரும்பும் மொழியில் என்னால் பேச முடியும். உங்கள் ஹெட்ஃபோன்களில் மொழிபெயர்ப்பைப் பெறலாம். எந்த மொழியிலும் என்னால் பதில் சொல்ல முடியும் என்று கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலி எழுந்து நின்று’ ஒரே நாடு, ஒரே மொழி’ வேண்டாம் என இந்தியில் பலமுறை கூச்சலிட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்களும், சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கணேசமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அவையில் இல்லை.

ஆனால், ஹிந்தியில் தான் பேசுவேன் என்று கோயல் தொடர்ந்து கூறினார். "நீங்கள் தமிழில் கேள்வி கேட்டீர்கள்... நான் இந்தியில் பதில் சொல்கிறேன்." இது குறித்து எனக்கு தீர்ப்பு வேண்டும். இங்கு மொழிக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என சபாநாயகரிடம், அவர் முறையிட்டார்.

இருப்பினும், பின்னர், பிஜேடியின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் திமுகவின் எம் தனுஷ் குமார் ஆகியோருக்கு அளித்த பதில்களில், கோயல் ஆங்கிலத்தில் பேசினார்.

கோயலை விமர்சித்த காங்கிரஸ் எம்பி ஜோதி மணி, பாஜக அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் “தமிழ்நாட்டின் மீது இத்தகைய திமிர்த்தனமான அணுகுமுறையை எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார்.

“அமைச்சர் ஆங்கிலத்தில் பேசாவிட்டால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கோயல் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார். அப்படிப்பட்ட திமிர்த்தனமான போக்கை இந்த அரசு தமிழகத்தின் மீது கொண்டுள்ளது. அவர்கள் எங்கள் தொண்டைக்கு உள்ளே இந்தி திணிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் எங்களை ஒருபோதும் அசைக்கமுடியாது, ”என்று ஜோதி மணி கூறினார்.

பின்னர், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய கணேசமூர்த்தி கூறியதாவது: “நான் மூன்றாவது முறையாக எம்.பி.யாக உள்ளேன், முன்பு உறுப்பினர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், சரளமாக ஆங்கிலம் பேசும் அமைச்சர்கள், அதே மொழியில் பதில் அளிப்பது வழக்கம்.

ஆனால் இந்த அரசுக்கு அதில் நம்பிக்கை இல்லை. அது ‘ஒரு தேசம் ஒரே மொழி’ என்பதை விரும்புகிறது, மேலும் அது ஹிந்தியை நம் மீது திணிக்க விரும்புகிறது.

குளிர்கால கூட்டத்தொடரின் போது, ​​ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் ஆங்கிலத்தில் பதிலளிக்குமாறு இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டார்.

ஒரு சமயம், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சருக்கு சரளமாக மொழி தெரிந்ததால், ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என, வைஷ்ணவ்-ஐ கேட்டுக் கொண்டார். இருப்பினும், மற்றொரு சந்தர்ப்பத்தில், வைஷ்ணவ் இந்தியில் மட்டுமே பதிலளித்தார்.

அதேபோல’ பிப்ரவரி 3 அன்று, திமுகவின் பி வேலுசாமி’ உதான் திட்டம் குறித்து, இந்து புனித யாத்திரை தலமான தமிழகத்தின் பழனிக்கு சேவை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சிந்தியா இந்தியில் தனது பதிலைத் தொடங்கினார்.

அப்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேசக்கூடிய அமைச்சர், ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அதே மொழியில் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் சுட்டிக்காட்டினார்.

“ஐயா, கேள்வி ஆங்கிலத்தில் கேட்கப்பட்டது. அமைச்சர் ஆங்கிலத்தில் பேசலாம். தயவு செய்து இந்தியில் பதில் சொல்லாதீர்கள்.. இது உறுப்பினர்களை அவமதிக்கும் செயல்” என்று இந்தியில் தரூர் கூறியிருந்தார். எனினும், அமைச்சர்கள் எந்த மொழியிலும் பதிலளிக்கலாம் என்று சபாநாயகர் பிர்லா கூறியிருந்தார்.

“நான் இந்தியில் பேசினால் உங்களுக்கு ஏன் பிரச்சனை? பதில் ஹிந்தியில் இருந்தால் அவருக்கு ஏன் பிரச்சனை வர வேண்டும். இந்த சபையில் மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். பதில் ஹிந்தியில் இருந்தால் என்ன கஷ்டம்? என்று இந்தியில் பதிலளிப்பதற்கு முன் சிந்தியா கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lok Sabha Piyush Goyal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment