Advertisment

விவசாயம், சிறு- குறு தொழில்களுக்கு சலுகைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விவசாயம், சிறு- குறு தொழில்களுக்கு சலுகைகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சிரமத்தில் இருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவி அளிக்க துணைக் கடனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தது. இதுதவிர, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் திறன் மேம்படுத்தலுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க  நிதிகளின் நிதியம் மூலம் ரூ.50,000 கோடி பங்கு மூலதனம் வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும்,  குறு, சிறு அல்லது நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி வகையிலான வர்த்தகங்கள் அந்த நிறுவனத்தின் மொத்த  வர்த்தக வரம்பில் சேர்க்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Advertisment

நேற்றைய கூடத்தில்,  குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பற்றிய வரையறை மேல்நோக்கித் திருத்தப்பட்டது.

குறு நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் முதலீடு அல்லது 5 கோடி ரூபாய் வர்த்தகம் என்றும்; சிறு நிறுவனங்களுக்கான அளவு 10 கோடி ரூபாய் முதலீடு 50 கோடி ரூபாய் வர்த்தகம் என்றும் திருத்தியமைக்கப்பட்டது.  நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பை ரூ.10 கோடி முதலீடு மற்றும் ரூ.100 கோடி வர்த்தகம் என்று உய்ர்த்தி கடந்த மே- 13ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.50 கோடி முதலீடு மற்றும் ரூ.250 கோடி வர்த்தகம் என்று உயர்த்தப்பட்டது.

நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பை உயர்த்தியது வரவேற்கும் நடவடிக்கை என்று இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் ஷரத் குமார் சரஃப் தெரிவித்தார். மொத்த லாபம் குறைவாக இருக்கும் சில துறைகள் மேம்பட்ட  தொழில்நுட்ப வசதிகளை கட்டமைக்க இந்த நடவடிக்கை உதவும். வர்த்தகம் வரம்பு தற்போது ரூ .250 கோடியாக உயர்த்தப்பட்டதால், இயந்திரங்களில் முதலீடு செய்வதற்கான சூழல் அதிகம் காணப்படும். ஏற்றுமதி வகையிலான வர்த்தகங்கள்  மொத்த வரம்பில் சேர்க்கப்படாது என்ற முடிவு, ரத்தின கற்கள் மற்றும் அலங்கார நகைகள்  துறைக்கு பயனளிக்கும். இந்த துறையின் தயாரிப்புச் செலவுகள்அதிகளவில் இருப்பதால் இவை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வரம்புக்குள் வருவதில்லை" என்று தெரிவித்தார்.

நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்புகள் நேற்று அதிகரிக்கப்பட்டாலும், சுயசார்பு இந்தியா பொருளாதார நடவடிக்கையின் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் வழங்கும் திட்டம், மே- 13 அன்று அறிவித்த வரம்புகள் (ரூ.10 கோடி முதலீடு மற்றும் ரூ.100 கோடி வர்த்தகம்) அடிப்படையில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரூ.3 லட்சம் கோடி திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி கடன் நிலுவை மற்றும் ரூ .100 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் உத்தரவாதம் இல்லாத இயல்பான கடன்களைப் பெறலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்த, திட்டத்தின் கீழ்,  100 சதவீத கடன் உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்குவதால் வங்கிகள் அவர்களுக்கு கூடுதல் 20 சதவீத கடனை வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த வரம்பில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2006 வருட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், மாற்றங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில், காரீஃப் பயிர்களுக்கு 2020-21 சந்தைப் பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலைகள் (MSP) அமைச்சரவை அதிகரித்தது.  நேற்றைய அறிவிப்பின் மூலம், 14 காரீஃப் பயிர்களுக்கு உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50  முதல் 83% வருமானம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. நேற்று அறிவிக்கப்பட்ட குறந்தபட்ச ஆதரவு விலையில், நைஜர் விதைக்கு அதிகபட்ச அதிகரிப்பு (ஒரு குவிண்டாலுக்கு ரூ.755) காணப்பட்டது. இதைத் தொடர்ந்து எள் (ஒரு குவிண்டாலுக்கு ரூ.370), உளுந்து (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300) மற்றும் பருத்தி (நீண்ட இழைப்பருத்தி) (ஒரு குவிண்டாலுக்கு ரூ.275) என விலை அதிகரிப்புகள் இருந்தன. மேலும்,  தெருவோர வியாபாரிகளுக்கு பணி மூலதனக் கடனாக ரூ 10,000 வரை வழங்கப்படும்.  அதை ஒரு வருடத்தில் மாதத் தவணைகளாகச் செலுத்தலாம். கடனை முறையாக அல்லது விரைவாக செலுத்தும் பட்சத்தில், வருடத்துக்கு 7 சதவீதம் கடன் மானியமாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நேரடிப் பயன் பரிவர்த்தனை முறையில் செலுத்தப்படும். கடனை முன்னதாகவே செலுத்தும் பட்சத்தில் அதற்கான அபராதம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, வேளாண் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளுக்காக வங்கிகள் அளித்த ரூ 3 லட்சம் வரையிலான அனைத்து குறுகிய காலக் கடன்களின் திரும்பச் செலுத்துதல் தேதியை 31.082020 வரை நீட்டிக்க மத்திய அரசு அனுமதியளித்தது. 1 மார்ச் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரையிலான வேளாண் குறுகிய காலக்கடன் பாக்கிக்கு, வங்கிக்கு 2 சதவீதம் கடன் தள்ளுபடியும், சரியாக செலுத்தியதற்காக விவசாயிகளுக்கு 3 சதவீதம் ஊக்கத்தொகையும் (இதன்மூலம், 3 லட்சம் வரையிலான கடன்களை 4 சதவீத வருட வட்டிக்கு கிடைக்கிறது) தொடர்ந்து அளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment