"மெகா கூட்டணி என்ற பெயரில் பல கலப்படங்கள் ஒன்று சேர்ந்துள்ளன" - பிரதமர் மோடி

55 மாதத்தில் 13 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு வழங்கி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி டாய்லெட்டுகள் உருவாக்கி உள்ளோம்

பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “எங்கள் அரசு நேர்மையானது. ஏழைகளுக்கானது. தற்போது தேர்தல் நேரம் வந்து விட்டது. நாங்கள் ஆட்சி செய்ய துவங்கியது முதல் இன்று வரை எவ்வித ஊழலும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறோம். ஊழல் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்று உள்ளோம். 21 ம் நூற்றாண்டில் இளைஞர்கள் பலர் வாக்களிக்க உள்ளனர். எங்கள் ஆட்சியில் ஊழலுக்கு இடம் இல்லை.

ஆரோக்கியமான போட்டியை நான் வரவேற்கிறேன். நேர்மையான ஆட்சி என்று பெயர் எடுத்து உள்ளோம். மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறோம். இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது. 2 சகாப்தம் முடிந்துள்ளது . ஒன்று காங்கிரசுக்கு முன் ( BC ) , வாரிசு அரசியலுக்குப்பின் ( AD) நான் சொன்ன மாற்றங்கள் நடந்துள்ளது. நான் எப்போதும் உண்மையைத்தான் பேசுகிறேன். என்னை பலரும் பலவிதமாக விமர்சிக்கின்றனர். என்னை விமர்சியுங்கள், நாட்டை விமர்சிக்க வேண்டாம். விமர்சனம் என்ற பெயரில் குறைகூறுவது தவறானது. சமீப காலமாக ராணுவத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர். உயிர் தியாகத்தை எதிர்கட்சியினர் அலட்சியமாக பேசுகின்றனர். இது முழுக்க, முழுக்க அரசியலுக்கானது. தேர்தல் கமிஷனை அவமதித்து பேசுகின்றனர். திட்டக்கமிஷனை காங்., உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஜோக்கர் என்கின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பா.ஜனதா வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது. நம்முடைய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை. இது என்னுடைய முக்கியமான குற்றச்சாட்டாகும். இந்த ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், இதற்கு பின்னால் இருப்பது யார்? எந்த நிறுவனம்?. நம்முடைய அண்டைய நாடுகள் போருக்கு தயாராகும் நிலையில் கட்டமைத்து வருகிறார்கள். இதனை ஏன் நாம் செய்யவில்லை. இது கிரிமினல் அலட்சியம். காங்கிரஸ் ஒரு வலுவான இந்திய விமானப்படையை விரும்பவில்லை.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 356வது சட்டப்பிரிவை ( ஆட்சிகலைப்பு ) தவறாக பயன்படுத்தினர். நாங்கள், ஒரு காலமும் 356 ஐ தவறாக பயன்படுத்தவில்லை. இந்திராவால் 50 க்கும் மேற்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் அரசியல் லாப நோக்கில் ஆட்சி நடத்தியது. தற்போது மெகாகூட்டணி என்ற பெயரில் பல கலப்படங்கள் ஒன்று சேர்ந்து உள்ளன. கலப்படத்தனமான ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். 55 மாதத்தில் 13 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு வழங்கி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 10 கோடி டாய்லெட்டுகள் உருவாக்கி உள்ளோம். 55 மாதத்தில் ஒரு கோடி பேருக்கு வீடு வழங்கி உள்ளோம். மக்களுக்கு கிடைக்க வேண்டிய மானியம் அவரவர் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக சென்று வருகிறது. முத்ரா கடன் திட்டத்தின் மூலம் பல ஆயிரம் பேர் பயன் பெற்று உள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கு புல்லட் புரூப் ஆடைகள் இல்லாமல் இருந்தது. நாங்கள் வந்து வாங்கினோம். நமது ராணுவத்தை பலப்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கினர். தேசிய பாதுகாப்பில் விளையாட வேண்டாம். காங்., அளித்த ரபேல் புகாருக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா தக்க பதிலடி கொடுத்தார். ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் காங்கிரஸ் தரகர்கள் மூலம் அணுகியது. ஆனால், நாங்கள் அதனை தவிர்த்து உள்ளோம்.

காங்., ஆட்சியில் மக்கள் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது. காமன் வெல்த், 2ஜி ஊழல் என நாடு சுரண்டப்பட்டது. நாட்டை கொள்ளை அடிக்க திருடர்களுக்கு காங்., வாய்ப்பு அளித்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தையும், எனது ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டு வருகிறோம். சவால்களை எதிர்கொள்வோம்” என்று மோடி பேசினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close