கேரளா செல்லும் மோடி... சபரிமலை அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் பா.ஜ.கவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்

சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

பத்தனம்திட்டாவில் மோடி உரை:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஊக்கும் அளிக்கும் வகையில் வரும்  ஜனவரி 6-ம் தேதி சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டாவில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பா.ஜ.க மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் கேரளாவில் பா.ஜ.க.வின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக அமையும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.முதல் கட்டமாக கேரளாவில் இப்போதே தேர்தல் பணிகளுக்கான நடவடிக்கைகளில் பாஜ தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பாஜ அகில இந்திய தலைவர் அமித்ஷா வரும் 31ம்தேதி பாலக்காடு வருகிறார்.

அது மட்டுமின்றி ஜனவரி 27-ம் தேதி திருச்சூரில் நடைபெறும் கேரள மாநில பா.ஜ.க இளைஞரணி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள கேரள பா.ஜ.க தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை, “பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இரண்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்கிறார். சபரிமலை விவகாரத்தின் மையமாக பத்தனம்திட்டா இருக்கும்போது அங்கு பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் பா.ஜ.கவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close