சீனா செல்லும் பிரதமர் மோடி... அதிபர் ஜின் பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனா செல்கிறார்

சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சீனா செல்கிறார். அங்கு, அந்நாட்டு அதிபர்  ஜின் பிங்குடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு இன்றும், நாளையும் சீனாவில் நடைபெறுகிறது. 2001ம் ஆண்டு எட்டு நாடுகளைக் கொண்டு எஸ்.சி.ஓ.என்ற அமைப்பு உருவானது. இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது.

இந்த மாநாட்டில் தீவிரவாதம், பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், வேளாண்மை, எல்லைப் பிரச்சினை உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து சீன அதிபர் சி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு உஹான் நகரில் நடைபெற்ற மாநாட்டில், இந்தியாவும் சீனாவும் எடுத்த முடிவுகளை அமல்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படும். மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சு நடத்த உள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் அதிபருடன் பேச்சு நடத்த மாட்டார் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close