Advertisment

உ.பி., தேர்தல்; வேறு வாய்ப்பில்லை, முஸ்லீம் வாக்குகள் எங்களுக்கே; சமாஜ்வாதி நம்பிக்கை

ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக இந்து சமூக வாக்குகள் செல்லும் என அஞ்சுவதால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான SP, வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக முஸ்லிம் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படையாக பேச மறுக்கிறது

author-image
WebDesk
New Update
First sign of trouble in SP-led camp

Asad Rehman 

Advertisment

SP hope for Muslim vote in UP elections rides on TINA factor: வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) எதிர்கொள்ள சமாஜ்வாடி கட்சி (SP) பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பல்வேறு சமூகங்களை கவரும் பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

இருப்பினும், மாநிலத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை கவர SP இதேபோன்ற நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என்பது இதுவரை தெளிவாகத் தெரிகிறது.

SP இன் மதிப்பீட்டில், இது "TINA (மாற்று இல்லை) காரணி" என்று கூறலாம். பல SP தலைவர்களின் கூற்றுப்படி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சி முஸ்லீம் சமூக வாக்குகளைக் கவர முயற்சிகளை மேற்கொள்வதைக் காணாததற்குக் காரணம், உத்தரபிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றால், முஸ்லிம் வாக்காளர்கள் SP-க்கு ஆதரவளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அக்கட்சி உறுதியாக நம்புகிறது.

யாதவ் அல்லாத OBC சமூகத்தினரிடையே அவர்களின் ஆதரவு தளங்களை மையமாகக் கொண்டு, UP தேர்தலுக்காக ஐந்து சிறிய கட்சிகளுடன் SP கூட்டணி அமைத்துள்ளது, ஆனால், மாநிலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் அடித்தளம் இருப்பதாகக் கூறப்படும் எந்தக் கட்சியுடனும் SP கைகோர்க்கவில்லை. அசாதுதின் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டணி வைக்க அகிலேஷ் மறுத்தது சில காலத்திற்கு முன்பு தெளிவாகியது. அதன் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம், பெரும்பான்மையான இந்து வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக மடைமாற்ற சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை என்பதே, அக்கட்சி தலைவர்களின் கருத்து.

உ.பி.யின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் முஸ்லிம் சமூகம் உள்ளது, ஆனால் தற்போதுள்ள வகுப்புவாத சூழ்நிலையில், மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தின் பின்னடைவுக்கு பயந்து எந்த ஒரு எதிர்க்கட்சியும் அவர்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை.

பாஜகவுக்கு ஆதரவாக இந்து வாக்காளர்களிடையே வகுப்புவாத துருவமுனைப்பு ஏற்படும் என்று அஞ்சுவதால், தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது கட்சியின் வியூகங்களின் ஒரு பகுதியாகும் என்று SP மூத்த தலைவர் ஒருவர் கூறினார். “மாநிலத்தில் பாஜகவைக் கவிழ்க்க விரும்பும் முஸ்லீம் சமூகத்தின் ஆதரவை சமாஜ்வாதி கட்சிப் பெறும் என்று அக்கட்சியின் உள் ஆய்வுகள் காட்டுகின்றன. முஸ்லீம் பிரச்சினைகளைப் பற்றி அதிகமாகக் குரல் கொடுத்தால், அது உ.பி.யில் உள்ள இந்து சமூகத்தினரிடையே துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என்று SP அஞ்சுகிறது,” என்று அந்த தலைவர் கூறினார்.

மாநிலத்தில் கட்சி தனது ஆட்சியை அமைக்க வேண்டுமென்றால், முஸ்லீம் பிரச்சனைகள் குறித்த பொதுப் பேச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை உள்ளூர் தலைவர்கள் புரிந்து கொள்ளும்படி, கடந்த ஆண்டு உ.பி., முழுவதும் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்ததாக, எஸ்.பி., தலைவர் ஒருவர் கூறினார்.

“பாஜகவை விட SP முஸ்லிம்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், அதனால்தான் கட்சியில் உள்ள முஸ்லீம் தலைமைகளும் கட்சியின் உயர்மட்டத் தலைமை உருவாக்கிய வியூகத்திற்கு உடன்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சி முகாம்களின் போது, ​​மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், முஸ்லிம்கள் விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் தலைமைக்கு புரியவைக்கப்பட்டது” என்று அந்த தலைவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அகிலேஷ் மாநிலத்தில் முஸ்லிம் பிரச்னைகளை எழுப்புவதையும் தவிர்த்து வந்தார். 2019 இல் நடந்த CAA-NRC போராட்டங்களைத் தொடர்ந்து, வன்முறையில் 19 பேர் இறந்ததைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு உதவியது SP தான் என்றாலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்ததோடு, முஸ்லிம் சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் கட்சி தொடர்ந்து அமைதியாக இருக்க விரும்புகிறது.

எனவே, பிராமணர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் தலித்துகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கத்தை எஸ்பி குறிவைத்து வரும் அதே வேளையில், மாநிலத்தின் மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் மதுராவில் சர்ச்சைக்குரிய கோயிலை மீண்டும் புதுப்பிக்க எழுப்பட்ட கோரிக்கைகள் போன்ற பிரச்சினைகளில் கட்சி வாய் திறக்கவில்லை. சமீப நாட்களில் பாஜக மூத்த தலைவர்கள் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டபோது, ​அகிலேஷ் யாதவ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மறுபுறம், அகிலேஷ் தனது இந்து மதப் பற்றைக் காட்டுவதில் இருந்து பின்வாங்கவில்லை. கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற அவர் அடிக்கடி கோயில்களுக்குச் சென்று வந்தார்.

இந்த மாத தொடக்கத்தில், லக்னோவில் உள்ள கோசைகஞ்ச் பகுதியில் தனது கட்சியின் பிராமண தலைவர்களில் ஒருவரால் கட்டப்பட்ட பரசுராமர் கோவிலில் அகிலேஷ் பிரார்த்தனை செய்தார். இதேபோல், டிசம்பரில் ரேபரேலி மாவட்டத்திற்கு அவர் பயணம் செய்தபோது ஒரு ஹனுமான் கோயிலுக்கும் சென்றார்.

இது முஸ்லீம் சமூகத்தின் ஆதரவை கட்சி இழக்க வழிவகுக்கும் என்று கேட்டதற்கு, SP தேசிய செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி, “சமாஜ்வாடி கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை நம்புகிறது. முஸ்லீம் சமூக தேவைகளை நாங்கள் உணர்ந்துள்ளோம், இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். மற்ற கட்சிகள் பெரிய வாக்குறுதிகளை அளிக்கும் அதே வேளையில் நாங்கள் ஆட்சி அமைத்த போதெல்லாம் எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். கடந்த, 2012-17 வரையிலான சமாஜ்வாதி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம். இம்முறையும் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி அவர்களின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம். யோகி ஆதித்யநாத் தலைமையிலான தற்போதைய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதால் எங்களின் மூத்த முஸ்லிம் தலைவர் அசம் கான் சிறையில் உள்ளார் என்று கூறினார்.

SP செய்தி தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் மேலும் கூறுகையில், “மற்ற SP முஸ்லிம் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். பல மாதங்களாக களப்பணியில் ஈடுபட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். மற்றொரு அம்சம் என்னவென்றால், வாக்காளர்கள் மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் துருவப்படுத்தப்படுவதை SP விரும்பவில்லை, மேலும் பணவீக்கம், வேலையின்மை, காவல்துறை அட்டூழியங்கள், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற உண்மையான பிரச்சினைகளை கையிலெடுக்க விரும்புகிறது என்று கூறினார்.

மற்றொரு SP தலைவர் கூறுகையில், கட்சி யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்ற எண்ணத்திலிருந்து விடுபட, முஸ்லிம் தலைவர்களுடன் பல யாதவர் தலைவர்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

"முஸ்லீம் மற்றும் யாதவர்களுக்கு ஆதரவான கட்சி என்றும் மற்ற சமூகங்களுக்காக வேலை செய்யவில்லை என்றும் உள்ள கட்சியின் பிம்பத்தை கட்சி மாற்ற விரும்புகிறது" என்று அந்த தலைவர் கூறினார்.

முஸ்லீம் சமூகம் கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட தொகுதிகளில் வரவிருக்கும் தேர்தலில் சுமார் 50 முஸ்லிம் வேட்பாளர்கள் கட்சியால் நிறுத்தப்படுவார்கள் என்று SP வட்டாரம் தெரிவித்துள்ளது. "இந்த இடங்கள் மொராதாபாத், அசம்கர், காஜிபூர், மாவ், ராம்பூர், பஹ்ரைச், பல்ராம்பூர் மற்றும் மேற்கு உ.பி. மாவட்டங்களான முசாபர்நகர், ஷாம்லி மற்றும் மீரட் போன்ற பகுதிகளில் இருக்கும், அங்கு முஸ்லிம்கள் கணிசமான மக்கள் வசிக்கின்றனர்" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

2017 உபி சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 311 இடங்களில் போட்டியிட்டபோது, ​​SP 57 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த 57 வேட்பாளர்களில் 17 பேர் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2012 சட்டமன்ற தேர்தலில், SP 78 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது, அவர்களில் 43 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2017 தேர்தலில், 403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டசபைக்கு மொத்தம் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அப்போது பாஜக அமோக வெற்றி பெற்றது.

2012 இல், SP அரசாங்கத்தை அமைத்தபோது, ​​UP சட்டமன்றத்திற்கு 69 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில், முஸ்லிம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, உ.பி., சட்டசபைக்கு, அதிக முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவாகும்.

முஸ்லீம் பிரச்சனைகளில் BSP மௌனம் காத்து வருவதாலும், காங்கிரஸ் பெண் வாக்காளர்கள் மீது பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதாலும், SP வரவிருக்கும் உ.பி, தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

“இம்முறை 80-90 சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். அதுவும் முஸ்லிம்கள் வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது பாஜகவுக்கு உதவும் என்பதை உணர்ந்திருப்பதால்தான்,” என்று கிழக்கு உ.பி.யைச் சேர்ந்த மூத்த சமாஜவாதி கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.

2017ல் பாஜக சிறப்பாக செயல்பட்டு 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றது முஸ்லிம் வாக்குகள் பல கட்சிகளுக்கு இடையே பிரிந்ததால்தான் என்று முஸ்லிம் சமூகத்தில் ஒரு கருத்து உள்ளது. எந்தக் கட்சியும் இல்லாத அளவுக்கு மாநிலத்தில் 99 முஸ்லிம் வேட்பாளர்களை BSP நிறுத்தியது. ஆனால் அந்த வேட்பாளர்களில் ஐந்து பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் பல தொகுதிகளில் பல முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் முஸ்லிம் வாக்குகள் பிரிக்கப்பட்டன.

அசம் கான் தொடர்ந்து சிறையில் வாடும் நிலையில், அவரது அந்தஸ்து கொண்ட ஒரு புதிய முஸ்லிம் தலைவர் SP அணிகளில் இருந்து வெளிவரவில்லை. SP யில் உள்ள பலர், கட்சி அசம் கானை "கைவிட்டுவிட்டது" என்று நம்பினாலும், SP க்கு இப்போது உள்ள ஒரே தெரிவு, இதனை தேர்தல் பிரச்சினையாக ஆக்காமல் அதன் அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதும், பின்னர் "கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக BJP அரசாங்கம் செய்த தவறுகளை சரிசெய்வதுதான்" என்று பல தலைவர்கள் நம்புகின்றனர்". "இப்போதே நாங்கள் அதைப் பற்றி அதிகம் பேசினால், பாஜக விரும்புவதை நாங்கள் செய்வதாகும், மேலும் இந்துக்களை துருவப்படுத்துவோம், பாஜகவுக்கு உதவுவோம்" என்று முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

முஸ்லிம் நிகழ்ச்சிகளில் அகிலேஷ் கலந்து கொள்கிறார் என்ற செய்தியை ஊடகங்கள் மிகைப்படுத்துவதாகவும் SP தலைவர்கள் கருதுகின்றனர். அக்கட்சியின் மொராதாபாத் எம்.பி எஸ்.டி.ஹாசன், “இப்தார் நிகழ்ச்சியில் அகிலேஷ்ஜி முஸ்லிம் தொப்பி அணிந்த படம் ஒன்று உள்ளது. அந்த படம் ஒவ்வொரு முறையும் பரப்பப்படுகிறது, அதேசமயம் மோடிஜி எங்காவது செல்லும் ஒவ்வொரு முறையும் தனது உடையை மாற்றுவார். உதாரணமாக, அவர் சீக்கிய சபையில் கலந்து கொள்ளச் செல்லும்போது, ​​அவர் பாக்டி அணிவார். ஆனால் அதை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் சமாஜ்வாதி கட்சியை முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்று பாஜக பேசும் ஒவ்வொரு முறையும் அகிலேஷ்ஜியின் தொப்பி அணிந்திருக்கும் ஒரு படம் பரப்பப்படுகிறது.

மேலும், “பாஜக ஆட்சியின் கீழ் உ.பி.யில் உள்ள முஸ்லிம்கள் அனைத்து மட்டங்களிலும் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி அல்லது காங்கிரஸால் அவர்களை இந்த துன்புறுத்தல் ஆட்சியிலிருந்து விடுவிக்க முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள், ஆனால் எஸ்பியால் மட்டுமே அதைச் செய்ய முடியும், எனவே அவர்கள் எங்களுக்கு ஒற்றுமையாக வாக்களிப்பார்கள். நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு, உ.பி.யில் உள்ள மற்ற அனைத்து சமூகத்தினருடன் அவர்களின் நலனையும் உறுதி செய்வோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Uttar Pradesh Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment