குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுன் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றவுள்ளார்.
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக கடந்த 2012-ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜி (81) பதவியேற்றார். அவரது பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதனிடையே, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கவுள்ளார். புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து பிரணாப் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே பிரணாப் முகர்ஜி உரையாற்றவுள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றவுள்ள அவர், பதவிக்காலத்தில் தாம் வகித்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது.
முன்னதாக, பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிரியாவிடை இரவு விருந்து அளித்தார். அப்போது பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவுப் பரிசையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதேபோல், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரணாப், அரசியலமைப்பைக் காக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அமளி, வெளி நடப்பால் நாடாளுமன்றத்தில் பயனுள்ள நேரம் வீணடிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். சில சோகங்களையும், வானவில் போன்ற வண்ணமயமான நினைவுகளையும் சுமந்துகொண்டு வெளியேறுகிறேன். மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் விடைபெறுகிறேன் என்றும் பிரணாப் நெகிழ்ச்சி தெரிவித்தார்.