Advertisment

முத்தலாக் தடை சட்டத்தை ஆதரிக்க வேண்டும் : அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்

முத்தலாக் தடை சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
President Speech, Parliament, Triple Talaq, All Parties

President Speech, Parliament, Triple Talaq, All Parties

முத்தலாக் தடை சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

Advertisment

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 29) தொடங்கியது. மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டு கூட்டமாக நேற்றைய கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து ஆலோசித்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு, நிதி பற்றாக்குறையும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பும் அதிகரித்து இருக்கிறது.

வருகிற 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வேளாண்மை சந்தைகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படுகின்றன.

நாட்டின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு கல்வி முக்கிய அடித்தளமாக அமைகிறது. எனவே பள்ளிக்கல்வியையும், உயர்கல்வியையும் வலுப்படுத்தி நவீனப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டு இருக்கிறது. குழந்தைகளின் மனதில் சிறுவயதிலேயே தொழில் தொடங்கும் ஆர்வம், புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் 2,400 அடல் கண்டுபிடிப்பு திறன்மேம்பாடு பரிசோதனை கூடங்களை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்களின் அனைத்து தேர்வுகளையும் நடத்தும் வகையில் தேசிய தேர்வு முகமை என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பை ஏற்படுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் 20 சிறந்த நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கப்படும்.

கடந்த 3½ ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 93 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக இரு திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஏழைகள், வீடு இல்லாதோர் அனைவருக்கும் குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதியுடன் கூடிய வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு தீர்மானித்து இருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் திட்டங்களில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. இந்த துறையில் நமது திட்டங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவுவதோடு, பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது. உலகிலேயே முதன் முதலாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்து இருக்கிறது.

முஸ்லிம் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு முத்தலாக் சட்ட மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது. அந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு சட்ட வடிவம் பெறும் என்று நம்புகிறேன். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முஸ்லிம் சகோதரிகளும், மகள்களும் சுயமரியாதையுடனும், தைரியத்துடன் வாழ வழிவகை ஏற்படும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 கோடியே 30 லட்சம் ஏழை பெண்களுக்கு சமையல் கியாஸ் அடுப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பெண்களுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது.

சமூகநீதியை நிலைநாட்டும் வகையிலும், பெண் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவதை தடுக்கவும் நாட்டில் 640 மாவட்டங்களுக்கு பெண் குழந்தைககள் பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு இல்லாத ஏழைகளுக்கு கணக்கு தொடங்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 31 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் பெருமளவில் பயன் அடைந்து உள்ளனர். பிரதம மந்திரி முத்ரா கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது. இதற்காக அந்த பிரிவில் உட்பிரிவினரை கண்டறிவதற்காக ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மூங்கில் மரம் அல்ல என்று அரசு அறிவித்து இருக்கிறது.

சமூக நல திட்டங்களின் கீழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை பிரிவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 45 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள்.

நமது கலாசாரமும், பண்பாடும் இந்தியாவின் அடையாளமாக விளங்குகின்றன. மனிதகுல வரலாற்றில் கலாசார பாரம்பரியமிக்க மிகப்பெரிய விழாவாக கும்பமேளா இடம் பெற்று உள்ளது. இந்தியாவின் முதல் பாரம் பரியமிக்க நகரமாக ஆமதாபாத்தை கடந்த ஆண்டு ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்தது. இதேபோல் இசை பாரம்பரியமிக்க நகரங்களின் பட்டியலில் சென்னை நகரத்தை சேர்த்து கவுரவித்து இருக்கிறது.

நாட்டில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் குழுக்கள் வன்முறை பாதையை கைவிட்டு இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வன்முறையை கைவிட விரும்பும் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.

 

Triple Talaq
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment