சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

நர்மதை ஆற்றின் மீது அணை கட்டும் திட்டத்துக்கு, கடந்த 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல்...

குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நர்மதை ஆற்றின் மீது அணை கட்டும் திட்டத்துக்கு, கடந்த 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். அதையடுத்து அணை கட்டும் பணி தொடங்கிய நிலையில், நீதிமன்ற வழக்குகள் உள்பட பல்வேறு பிரச்னைகளினால் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. அதன் பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, 56 ஆண்டுகள் கழித்து தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த அணை உலகின் 2-வது மிகப்பெரிய அணையாகும்.

ரூ.16,000 கோடி செலவில் 30 மதகுகளுடன் 138 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்த அணையின் மூலமாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதியும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 67 பிறந்தநாளை முன்னிட்டு இந்த அணையை அவர் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, குஜராத் மாநிலம் சென்ற மோடி, இன்று அதிகாலை ​​அவரது தாயார் ஹிராபாவிடம் ஆசீர்வாதம் பெற்றார். சுமார் 20 நிமிடங்கள் தனது தாயுடன் செலவிட்ட பிரதமர் மோடி, அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதியில் உள்ள சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

அதையடுத்து, நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு வந்த பிரதமர், அங்கு பூ தூவி பூஜைசெய்தார். பின்னர், உலகின் 2-வது மிகப்பெரிய அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அணையை நாட்டு அர்ப்பணித்த பிரதமர் மோடி, தபோய் மற்றும் அம்ரேலி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

நாடு முழுவதும் இன்றைய தினத்தை ‘சேவா திவாஸ்’ ஆக பாஜக அனுசரிக்கிறது. அதை முன்னிட்டு மருத்துவ முகாம்கள், ரத்ததான நிகழ்வுகளை அக்கட்சியினர் நடத்துகின்றனர். தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரஉள்ளது. அதையொட்டி, பாஜக வெற்றி வியூகம் வகுத்து வருகிறது. எனவே, குஜராத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். முன்னதாக, ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய ஆமாதாபாத் – மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் அபே-வுடன் சேர்ந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் தொடச்சியாக சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close