”ஐ.டி-ல் வேலைக்குப் பாதுகாப்பில்லை”: தற்கொலை செய்த இளைஞர்

பூனேவில் ஐ.டி. துறையில் வேலைக்குப் பாதுகாப்பில்லை என, தன் குடும்பத்தின் மீதான கவலையால் 25 வயது இளைஞர் ஒருவர் வேலைக்கு சேர்ந்த 5 நாட்களிலேயே உணவகத்தின் 6-ஆம் தளத்திலிருந்து குதித்து தற்கொல செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா குருபிரசாத் என்ற 25 வயது இளைஞர், கடந்த 9-ஆம் தேதி பூனேவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்காக அந்நிறுவனம் உணவகம் ஒன்றில் அனைத்து வசதிகளையும் செய்து தந்தது. இந்நிலையில், புதன் கிழமை அதிகாலை ஒன்றரை மணியளவில் அந்த இளைஞர் உணவகத்தின் 6-ஆம் தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதைக்கண்டு அங்கிருந்த இரவுநேர காவலாளிகள் விரைந்து சென்று அந்த இளைஞரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞர் தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “ஐ.டி. துறையில் வேலைக்கு பாதுகாப்பில்லை. அதனால், என்னுடைய குடும்பம் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்”, என எழுதப்பட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற அச்சம் பரவலாக உள்ள நிலையில், எங்கே நமக்கு வேலை போய்விடுமோ என்ற பயத்தில் மன அழுத்தம் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

×Close
×Close