Advertisment

'பிரதமர் மோடி தனது சூட்-பூட் நண்பர்களுக்காகவே சேவை புரிகிறார்'! - ராகுல் காந்தி

No-Confidence Motion: காங்கிரஸின் அர்த்தத்தை எனக்கு புரிய வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'பிரதமர் மோடி தனது சூட்-பூட் நண்பர்களுக்காகவே சேவை புரிகிறார்'! - ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. தீர்மானத்தை முன்மொழிந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ஜெயதேவ் கல்லா உரையாற்றினார்.

Advertisment

இதன்பின், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "மிஸ்டர். கல்லா, 21வது நூற்றாண்டின் அரசியல் ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவர் நீங்கள். ஆனால், உங்களைப் போன்று பலரும் இந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகள், தலித்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரும் உங்களைப் போன்று பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி திட்டத்தை முதன்முதலில் காங்கிரஸ் கையிலெடுத்த போது, அதனை அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எதிர்த்தார். ஆனால், இப்போது அவர்களே அதனை அமல்படுத்தியுள்ளனர். பணமதிப்பிழப்பை திடீரென அமல் செய்தது இந்த மத்திய அரசு.

பணக்கார தொழிலதிபர்களுக்காகவே பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஏழை மக்களின் மனதில் அவருக்கு இடமில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மோடி உறுதியளித்தார். ஆனால், ஆண்டுக்கு 4 லட்சம் வேலை வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் பேசி வருகிறார். ரஃபேல் ஒப்பந்தம் ஏன் HAL-லிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, வாழ்க்கையில் ஒரு விமானம் கூட உருவாக்காத வேறு ஒரு நபருக்கு ஏன் கொடுக்கப்பட்டது? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். ரஃபேல் ஒப்பந்தத்தால் ஒரு தொழிலதிபர் மட்டும் பயன் அடைய வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்? பிரதமர் மோடி என் கண்களை பார்த்து பேசுவதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைகிறது. ஆனால், பிரதமர் மோடி தனது 'சூட்-பூட்' நண்பர்களின் நலனுக்காக சேவை புரிவதால், இந்தியாவில் மட்டும் அதன் விலை உயருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்களால் எதுவும் பேச முடிவதில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாடு இந்தியா என்று ஒரு சர்வதேச பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் கௌரவம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலித்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார். மக்களவை இடைவேளையின் போது, பாஜக எம்.பி.க்கள் நான் நன்றாக பேசுவதாக தெரிவித்தனர்.

ஹிந்துவாக இருப்பது பற்றியும், எனது வாழ்க்கை பற்றியும், காங்கிரஸின் அர்த்தத்தையும் எனக்கு புரிய வைத்த பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் என்னை 'பப்பு' என்று கூட அழைக்கிறீர்கள். ஆனால், அதற்காக உங்களை நான் வெறுக்கவில்லை. அதேபோல், என்னையும் வெறுக்க வேண்டாம்" என்று பேசிய ராகுல் காந்தி, விறுவிறுவென பிரதமர் இருக்கைக்கு சென்று, மோடியை கட்டியணைத்தார்.

அதன்பின், மீண்டும் ராகுலை அழைத்த பிரதமர் மோடி, அவருக்கு கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment