”பெண்ணை மீட்கவே இந்த கொலை, இதனை குற்றமாக கருதவில்லை”: ‘லவ் ஜிகாத்’ பெயரில் கொடூரமாக கொலை செய்தவர்

ராஜஸ்தானில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் 47 வயது முஸ்லிம் நபரை அடித்து, தீயிட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் 47 வயது முஸ்லிம் நபரை அடித்து, தீயிட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தன் குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாலேயே தான் அவரை கொலை செய்ததாக, கைதான முக்கிய குற்றவாளி போலீஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அஃப்ரசூல் (வயது 47) என்பவரை, ஒரு நபர் கோடாரியால் அஃப்ரசூலை சரமாரியாக தாக்கி, அதன்பின் பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தி கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், “ஜிஹாதிகளே எங்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள். லவ் ஜிகாத்திலிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றவே இவனை கொலை செய்தேன்”, என ஆக்ரோஷமாக கூறுகிறார்.

மிகவும் கொடூரமான இச்சம்பவத்தை அந்நபர் தன் உறவினரான 14 வயது சிறுவனை வைத்தே வீடியோவாக எடுத்திருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முக்கிய குற்றவாளியான ஷம்புலால் ரேகர் மற்றும் 14 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

இந்நிலையில், ”நான் குற்றம் செய்ததாக கருதவில்லை”, என கைதான ஷம்புலால் ரேகர் காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

“எங்கள் காலணியை சேர்ந்த பெண் ஒருவருடன் அவர் தொடர்புகொண்டிருந்தார். அப்பெண்ணை மீட்க நினைத்தேன். அதனால்தான் இவ்வாறு செய்தேன். அந்த பெண்ணை எனக்கு குழந்தை பருவத்திலிருந்தே தெரியும். அப்பெண்ணின் சகோதரருடன் தான் நான் படித்தேன்”, என விசாரணையில் ஷம்புலால் ரேகர் கூறியுள்ளார்.

மேலும், கொலையான முகமது அஃப்ரசூல் தன் குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாலேயே தான் அவரை கொலை செய்ததாக ஷம்புலால் தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

×Close
×Close