தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இது மட்டுமல்லாது, இவர் மீது கொலை வழக்கு ஒன்றும் உள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. பிற்பகல் 2.45 மணியளவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஹரியானா, பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். எனவே, தீர்ப்பை முன்னிட்டு அவரது பக்தர்கள் பஞ்ச்குலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே திரண்டுள்ளனர். ஒருவேளை சாமியாருக்கு எதிராக தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் அங்க்கு வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, பஞ்ச்குலா, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் சண்டிகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆஃப், முகல்நூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சில இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பதற்றமுள்ள இடங்களுக்கு அரசுப் பேருந்துகள் இன்று இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துணை ராணுவ படை வீரர்கள் மட்டும் சுமார் 15,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.