ஆர்எஸ்எஸ் பிரதிநிதி சபை கூட்டம் : முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கேரள அரசு இந்துக்களை அல்லாதோரையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று (8.3.19) தொடங்கியது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான கூட்டம், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 1400-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால், தேர்தல் குறித்தும், அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடைப்பெற்ற முதல் நாள் கூட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குண்டுவீசி தகர்த்த விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்தும், இந்த முடிவை எடுத்த மோடி அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புலவாமா மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், இந்தியாவின் சகிப்புத்தன்மையை பலவீனமாக கருதக்கூடாது என பயங்கரவாத அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பின், ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் மன்மோகன் வைத்யா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், “பாக்கிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படைக்கும், அதற்கான முடிவு எடுத்த, மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், பலர் உயிரிழந்ததற்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இந்தியாவின் சகிப்புத் தன்மையை, வலிமை குறைவாக கருதக் கூடாது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைரும், உச்ச நீதிமன்றத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.

இந்த விஷயத்தில், உச்ச நீதிமன்றம் மீது, எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் அனைத்து தடைகளும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க இருக்கிறோம். இந்துக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதே கேரள அரசின் வேலை. கேரள அரசு இந்துக்களை அல்லாதோரையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கிறது. இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஏதும் விவாதிக்கப்படவில்லை. அதே நேரம், மதநல்லிணக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் சேமிப்பு போன்றவற்றை பற்றி பேசவுள்ளோம். ஆர் எஸ் எஸ் அமைப்பின் கிளைகளின் எண்ணிக்கை 58, 967 ல் இருந்து 59, 266 ஆக அதிகரித்துள்ளது. “ என்று தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close