சபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்

நாளை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது... பதட்டமான சூழலில் கேரள மாநிலம்...

Sabarimala Temple Case : கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் மறு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தைத் தொடர்ந்து சபரிமலை கோவில் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாளை சபரிமலை கோவிலின் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் : இதுவரை நடந்தது என்ன? 

04:50 PM: வாகனங்களை வழிமறிக்கும் போராட்டக்காரர்கள்

சபரிமலையில் நாளை நடக்கவுள்ள மண்டல பூஜைக்காக வாகனங்களில் வருபவர்களை போராட்டக்காரர்கள் வழிமறித்து, அதில் பெண்கள் இருக்கிறார்களா என்பதை சோதனை செய்கின்றனர். பெண்களே வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர்.

04:30 PM: ‘உத்தரவை அமல்படுத்தியே தீருவோம்’

திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அரசு நிறைவேற்றும் எனவும் எந்த தடை மனுவையும் கேரள அரசு தாக்கல் செய்யாது எனவும் தெரிவித்தார். சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தரப்படும். யாரேனும் சட்டத்தை கையில் எடுக்க நினைத்தால், அதை அனுமதிக்க முடியாது” என்றார்.

03:00 PM : எரிமேலியில் கொட்டித் தீர்க்கும் கனமழை 

ஐயப்ப பக்தர்கள் தங்கும் இடங்களில் ஒன்று தான் எரிமேலி. தற்சமயம் அங்கு கனமழை பெய்து வருகிறது.

02:55 PM : நாளை நடைபெற இருக்கும் மகர விளக்கு விழாவிற்காக சபரிமலை விரையும் பக்தர்கள்

சபரிமலையில் 45 நாட்களுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் மண்டல பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து நாளை நடை திறக்க இருப்பதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

02:50 PM : பெண்களின் அனுமதி குறித்த தீர்ப்பிற்கு அவசரத் தடை வழங்க எம்.பி. வேண்டுகோள்

பத்தினம்திட்டா தொகுதியில் தான் சபரிமலை இருக்கிறது. இந்த தொகுதியின் எம்.பி. ஆண்ட்டோ அந்தோணி, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அவசரகாலத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற தர்ணாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இப்படி குறிப்பிட்டார். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ் கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

02:45 PM : தேவசம் போர்டுடனான கலந்தாலோசனை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைப்பு 

தேவசம் போர்ட் மற்றும் பந்தளம் ராஜ குடும்பத்தினர் இடையில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துவிட்டதால், மீண்டும் இந்த ஆலோசனையை வருகின்ற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்திருப்பதாக ராஜ குடும்ப உறுப்பினர் சசிக்குமார் வர்மா குறிப்பிட்டிருக்கிறார்.

02:40 PM : பந்தளம் குடும்பத்தினர் மற்றும் தேவசம் போர்டின் பேச்சு வார்த்தை தோல்வி

பந்தளம் ராஜ குடும்பத்தினர் தேவசம் போர்ட்டினை உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மறு சீராய்வு மனுவினை போட கேட்டுக் கொண்டது. ஆனால், அதில் பந்தளம் குடும்பம் எதிர்பார்த்த கோரிக்கைகளை குறிப்பிடவில்லை என்ற காரணத்தால் இன்று மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

02:30 PM : தேவசம் போர்டின் நிலைப்பாடு என்ன?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான போது, தீர்ப்பினை ஆதரித்தது தேவசம் போர்ட். ஆனால் பாரம்பரியத்திற்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் மத்தியில் தேவசம் போர்ட் சிக்கிக் கொண்டு தவிக்கிறது என அதன் தலைவர் பத்மகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.

 02:15 PM: சபரிமலை கோவில் விவகாரம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதில் இருந்து பதட்டமான சூழ்நிலையில் இருக்கிறது கேரள மாநிலம். பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான தேவசம் போர்ட் இரண்டும் சேர்ந்து மக்களை ஒன்று திரட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக வீதிகளில் போராட்டங்கள் நடத்தினர். இந்த லைவ் அப்டேட்டை ஆங்கிலத்தில் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close