மாட்டிறைச்சி: மத்திய அரசு உத்தரவுக்கு நாடு முழுவதும் தடை - உச்சநீதிமன்றம்

மாட்டிறைச்சி தொடர்பாக அண்மையில் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாடுகள், எருமைகள், ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை நீக்க முடியாது எனக்கூறி, அதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

மாடுகள், எருமைகள், ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என, மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த கால்நடைகளை விவசாய தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், கால்நடைகளை வாங்குவோர், விற்போர் என இருதரப்பும் இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவற்றை வியாபாரம் செய்ய முடியும் என்பது உட்பட கடுமையான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது.

இது, மக்களின் உணவு சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல் உள்ளது எனவும், குறிப்பாக மாட்டிறைச்சி உண்பவர்களின் உணவு சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது எனவும் பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், இந்த உத்தரவுகளை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் செல்வகோமதி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மிருகவதைத் தடுப்பு சட்டத்தின்படி, இறைச்சிக்காக கால்நடைகள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறப்பட்டிருந்தது. மேலும், மத்திய அரசின் உத்தரவுகள் சிறுபான்மை மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் கூறப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையில், மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் உத்தரவுகளுக்கு நான்கு வார காலம் இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் 30-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அப்போது, தனிப்பட்ட ஒருவர் தன் உணவை தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாட்டிறைச்சி தொடர்பாக அண்மையில் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவுகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களால் அந்த உத்தரவுகளை தளர்த்தும் நடவடிக்கைகளிலும், மறுபரிசீலனை செய்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, மாட்டிறைச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த தடையை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. இதன்மூலம், மத்திய அரசு கூறியதைப் போல கட்டுப்பாடுகளை தளர்த்தாவிட்டால் வழக்கை மீண்டும் தொடர முடியும்.

×Close
×Close