வீட்டினுள் அனுமதிக்காத உரிமையாளர்: மகனின் சடலத்துடன் இரவில் கொட்டும் மழையில் நின்ற பெண்

உரிமையாளர் சடலத்தை வீட்டினுள் கொண்டு வர அனுமதிக்காததால், இறந்துபோன தன் 10 வயது மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் நின்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

ஐதராபாத்தில் வீட்டின் உரிமையாளர் சடலத்தை வீட்டினுள் கொண்டு வர அனுமதிக்காததால், இறந்துபோன தன் 10 வயது மகனின் சடலத்துடன் இரவு முழுவதும் நின்ற சம்பவம் காண்போரை கலங்கடிப்பதாக அமைந்தது. இந்த உலகில் மனிதம் இறந்துவிட்டதா என கேட்கத்தோன்றும் வகையில் இச்சம்பவம் உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் ஈஸ்வரம்மா என்பவரது பத்து வயது மகன், கடந்த 13-ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி நிலோஃபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், மகனின் சடலம் அடங்கிய குளிரூட்டப்பட்ட பெட்டியை வீட்டுக்கு கொண்டு சென்றார் ஈஸ்வரம்மா. ஆனால், வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் குப்தா சடத்தை வீட்டுக்குள் கொண்டு வரக்கூடாது என இரக்கமே இல்லாமல் கூறியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் குப்தா தன் வீட்டினுள் சடலத்தைக் கொண்டுவந்தால் வீட்டுக்கு அமங்கலம் ஏற்பட்டு விடும் என என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

வீட்டின் ஒரு அறையை மட்டுமே ஈஸ்வரம்மா வாடகை எடுத்துள்ளார். மீதி இடம் முழுவதையும் உரிமையாளரின் உறவினர்களே ஆக்கிரமித்துள்ளனர். அவர்களும், சடலத்தை வீட்டுக்குள் கொண்டுவந்தால் தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் எனக்கூறி உள்ளே கொண்டு வர மறுத்ததாக கூறப்படுகிறது.

”வீட்டு உரிமையாளர் என் மகனின் சடலத்தை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. அவருடைய மகளின் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட நிறைவடையாததால் இதனை அமங்கலமாக கருதுகின்றனர். சடலத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல், ஆனால், வீட்டிற்குள் கொண்டு வராதே என அவர் கூறினார்”, என பாதிக்கப்பட்ட ஈஸ்வரம்மா தெரிவித்தார்.

”அவர்கள் உள்ளே அனுமதிக்காத்தால் இரவு முழுவதும் கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் ஈஸ்வரம்மா நின்று கொண்டே இருந்தார்.”, என அக்கம்பக்கத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சடலத்தை வீட்டினுள் கொண்டு வர வீட்டின் உரிமையாளர் சம்மதித்தார். ஆனால், ஈஸ்வரம்மாவின் அறை மிக சிறியதாக இருந்ததால் பெட்டியை உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை.

ஆனால், இதுகுறித்து எந்தபுகாரும் முறையாக அளிக்கப்படாததால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

×Close
×Close