Advertisment

வெற்று காகிதங்களில் கையெழுத்து, 8 கோடி லஞ்சம்: ஆர்யன் கான் வழக்கில் நடப்பது என்ன? சாட்சி வெளியிட்ட பகீர் தகவல்கள்

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மகாராஷ்டிரா அரசு உயர்மட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கோரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Aryan Khan Drug Case

Aryan Khan drugs case : நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில், உல்லாச கப்பலில் சோதனை நடத்திய நாளின் முடிவில், என்.சி.பி. அலுவலகத்தில் சாட்சியாளர் ஒருவரிடம் 10 வெற்று காகிதத்தில் விசாரணை செய்யும் அதிகாரிகள் கையெழுத்து வாங்கியதாக முக்கிய சாட்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Advertisment

பிரபாகர் சைல் என்று அழைக்கப்படும் அந்த நபர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் வந்த கே.பி. கோஷாவி என்ற தனியார் துப்பறிவாளர் ரூ. 8 கோடியை போதைப் பொருள் தடுப்பு வாரியத்தின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கேடேவிற்கு வழங்குவதாக கூறியதை கேட்டதாகவும் ஞாயிறு அன்று கூறினார்.

ஆர்யன் மற்றும் பிறருக்கு எதிரான வழக்கில் NCB சாட்சியாக இருக்கும் கோஷாவி தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் மீதும் பல மோசடி வழக்குகள் உள்ளன. என்.சி.பி.யால் கொல்லப்படலாம் என்ற அச்சம் தன்னிடம் நிலவியதாக சைல் கூறினார். ஆனால் அவருடைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது என்.சி.பி.

இது தொடர்பான அறிக்கை ஒன்றில், இது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. பொய் வழக்கு ஒன்றில் தன்னை சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறி வான்கேடே மும்பை காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வரும் சைல் தனி நபர்களுக்கு பாதுகாப்பாளராக செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜூலை 22ம் தேதி அன்று கோஷாவி அவரை பணியில் அமர்த்தியதாக கூறப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி அன்று, கோஷாவி சைலை மும்பையில் உள்ள என்.சி.பி. அலுவலகத்திற்கு வருமாறு கூறியதாக வழக்கறிஞரால் அறிவிக்கப்பட்ட ஐந்து பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று மும்பை கடற்கரையில் கோர்டேலியா குரூஸுக்குச் சொந்தமான சொகுசுக் கப்பலான எம்பிரஸ் கப்பலில் விருந்து நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை நடைபெறும் போது கோஷாவி என்.சி.பி. அதிகாரிகளுடன் இருந்தார் அன்றும் சைலை, சொகுசு கப்பல்களின் முனையமாக உள்ள க்ரீன் கேட்டிற்கு அருகே நிற்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சரியாக பகல் 1.23 பணிக்கு கிரண் கோஷாவி என்னுடைய வாட்ஸ் ஆப்பிற்கு சில புகைப்படங்களை அனுப்பி அவர்கள் யார் என்று அடையாளம் காணுமாறும், அவர்களில் யாரேனும் க்ரீன் கேட் வழியாக உள்ளே வருகிறார்களா என்று கண்காணித்து கூறுபடியும் கூறினார் என்று சைல் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஒரு நபரை அடையாளம் கண்டு, அந்த நபர் பஸ் நம்பர் 2700-ல் வந்ததாகவும் கூறினேன். 4.23 மணி அளவில், நான் அடையாளம் காட்டிய நபரையும், மேலும் 13 நபர்களையும் கைது செய்துவிட்டதாக அவர் வாட்ஸ்ஆப்பில் பதில் அனுப்பினார் என்றும் சைல் கூறியுள்ளார்.

கோஷாவி தன்னை அழைத்ததாக தெரிவித்த சைல், ஆர்யன் கான் மற்றும் ஃபேஷன் மாடல் முன்முன் தமேசா ஆகியோரை என்.சி.பி. அதிகாரிகளுடன் பார்த்ததாகவும் பிறகு ஆர்யன் கானை என்.சி.பி. அதிகாரிகள் அழைத்து சென்ற போது அவரும் உடன் சென்றதாகவும் சைல் கூறினார். என்.சி.பி அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த தன்னை கோஷாவி போன் மூலம் அழைத்து உள்ளே வரும்படி கூறியதாக அவர் அறிவித்தார். பிறகு அங்கே, வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திடும் படி தன்னைக் கேட்டுக் கொண்டதாக சைல் கூறியுள்ளார்.

பஞ்சகள் (Panches) இந்த சமூகத்தின் மரியாதைக்குரிய குடிமக்களாகவும் காவல்துறையினர் நடத்தும் ஆய்வுகள் மற்றும் அவர்கள் கைப்பற்றும் பொருட்கள் தொடர்பாக சுயதீனமான சாட்சியங்களாகவும் இருப்பார்கள். சாட்சிகள் தயாரிக்கும் ஆவணம் பஞ்சநாமம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் வழக்கு விசாரணையில் வழங்கப்பட்ட வலு சேர்க்க இது பயன்படுத்தப்படுகிறது.

அக்டோபர் மூன்றாம் தேதி அன்று, கே.பி. கோஷாவி எனக்கு விடுத்த அழைப்பில் நானும் ஒரு முக்கிய சாட்சியாக இதில் இருக்க வேண்டும் என்று கூறி என்.சி.பி. அலுவலகத்திற்கு அழைத்தார். அங்கே நான் சென்ற போது சமீர் வான்கேடே அங்கிருக்கும் அதிகாரி ஒருவரிடம் என்னுடைய கையெழுத்து மற்றும் பெயரை வாங்கிக் கொள்ளும் படி உத்தரவு பிறப்பித்தார். அங்கு வந்த அதிகாரி என்னிடம் 10 காகிதங்களில் கையெழுத்திடும் படி கூறினார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்.சி.பி. அலுவலகத்தில் இருந்து வெளியேறிய கோஷாவி, பணம் தொடர்பான விவகாரங்களைப் பேச சாம் டிசோசா என்பவரை தொடர்பு கொண்டார்.

லோவர் பாரேல் வரும் வரை, சாமிடம் போனில் பேசிக் கொண்டிருந்த கே.பி. கோஷாவி, நீங்கள் ரூ. 25 கோடிக்கு இலக்கு வைத்தீர்கள். ஆனால் 18 கோடிக்கு முடிவு செய்வோம். ஏன் என்றால் ரூ. 8 கோடியை வான்கேடேவிற்கு வழங்க வேண்டும் என்று கூறியதாக சைல் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 9 சுயதீன சாட்சியங்களில் ஒருவரான பிரபாகர் சைலின் கூற்றுப்படி கோஷாவி மற்றும் டிசோசா பூஜா தட்லானி என்ற நபரை அதன் பின்னர் சந்தித்ததாக தெரிய வந்துள்ளது. சைலின் அறிக்கையில் தட்லானி யார் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர் ஷாருக் கானின் மேலாளர் என்று சைல் பிறகு தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக அவரிடம் பேச மேற்கொண்ட கோரிக்கைகளுக்கு தட்லானி பதிலளிக்கவில்லை.

தெற்கு மும்பையில் உள்ள டார்டியோ போக்குவரத்து சிக்னலுக்கு சென்று ரூ .50 லட்சம் வசூலிக்க கோஷாவி கேட்டதாக சைல் கூறியுள்ளார்.

காலை 9.45 மணி அளவில் அவர் கூறிய இடத்திற்கு வந்தேன். அங்கே வெள்ளை நிற கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் எண் 5102. அதில் இருந்த நபர் என்னிடம் இரண்டு பைகளை கொடுத்தார். நான் அதனை எடுத்துக் கொண்டி வஷியில் இருக்கும் கோஷாவி வீட்டில் கிரணிடம் ஒப்படைத்தேன். பிறகு அந்த பணத்தை ட்ரைடெண்ட் ஹோட்டலுக்கு அருகில் டிசோசாவிடம் வழங்குமாறு கூறினார். ஆனால், அந்த நாளில் இருந்து கோஷாவியை காணவில்லை.

கே.பி. கோஷாவியை தற்போது காணவில்லை. என்னையும் கடத்திச் சென்று, என்.சி.பி. அதிகாரிகள் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. இது போன்ற பெரிய வழக்கில் சாட்சியங்கள் கொல்லப்படுவது அல்லது கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே நான் உண்மையை கூற விரும்புகிறேன் என்று சைல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள என்சிபியின் துணை இயக்குநர் ஜெனரல் முத்தா அசோக் ஜெயின் ஒரு அறிக்கையில் "இந்த வழக்கில் அவர் சாட்சியமாக இருப்பதாலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும் தன்னுடைய கருத்துகளை அவர் சமூக வலைதளங்களில் தெரிவிப்பதற்கு பதிலாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். கூடுதலாக, மேலும், பிரபாகர் சைல் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பிரமாணப் பத்திரத்தில் சில நபர்கள் மீது சில விஜிலென்ஸ் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

சைலின் வெளியிட்ட ஐந்து பக்க அறிக்கை நோட்டரிஸ் செய்யப்பட்டு, பிரமாணப் பத்திரம் தோற்றம் பெற்றிருந்தாலும், அது எந்த நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”எங்கள் மும்பை மண்டல இயக்குநர், சமீர் வான்கேடே இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார். இதில் கூறப்பட்டுள்ள சில விவகாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினருடன் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த பிரமாணப் பத்திரத்தை என்.சி.பியின் பொது இயக்குநர் பார்வைக்கு அனுப்பி, மேற்படி நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என முத்தா ஜெயின் கூறியுள்ளார்.

சொகுசுக் கப்பலில் சோதனை என்ற செய்தி வெளியானவுடன், கோஷாவி ஆர்யன் கானுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஞாயிறு அன்று சைல் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கோஷாவி ஆர்யன் கானிடம் போனை கொடுத்து யாரிடமோ பேச வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 6ம் தேதி அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கோஷாவி ஆர்யன் கானை என்.சி.பி. அலுவலகத்திற்குள் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் வீடியோக்களை வெளியிட்டது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநில அமைச்சர் நவாப் மாலிக், குற்ற்வாளி ஒருவரை கையாள என்.சி.பி. அதிகாரி அல்லாத ஒருவரை அனுமதிக்கும் செயல் குறித்து கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில், சைலின் பெயர் இரண்டாவது சாட்சியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. ர். இந்த பஞ்சநாமா சர்வதேச கப்பல் முனையத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் - ஆர்யன், அர்பாஸ் மெர்ச்சன்ட், இஷ்மீத் சிங் சாதா, கோமித் சோப்ரா மற்றும் விக்ராந்த் சோக்கர் ஆகியோருக்கு எதிராக செய்யப்பட்டது. கோஷாவி இந்த பஞ்சநாமாவில் முதல் சாட்சியமாக இணைக்கப்பட்டுள்ளார்.

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர், சஞ்சய் ராவத் ஞாயிறு அன்று சைலின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆர்யன் கான் வழக்கில் என்சிபி சாட்சியாளரிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கியது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் பெரும் பணத் தேவை இருந்ததாகவும் தகவல்கள் உள்ளன. மகாராஷ்டிராவை அவதூறாகப் பேசுவதற்காக இந்த வழக்குகள் போடப்படுகின்றன என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார். இது உண்மையாகிவிடும் என்று தோன்றுகிறது என்று ராவத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீலை டேக் செய்து, தானாக முன் வந்து காவல்துறை இதில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மகாராஷ்டிரா அரசு உயர்மட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் தாக்கரே மற்றும் உள்துறை அமைச்சர் வால்ஸ் பாட்டீலைச் சந்திக்க உள்ளதாக நவாப் மாலிக் கூறினார்.

அடையாளம் தெரியாத நபர்கள், பொய்யான வழக்கு ஒன்றில் தன்னை சிக்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளும் தலைமை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கேடே.

என்.சி.பி.யின் அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட்டில் அளிக்கப்பட்ட அந்த புகாரில், என்சிபி சி.ஆர். எண் 94/2021 (கப்பல் போதைப்பொருள் வழக்கு) -ல் அடையாளம் தெரியாத நபர்கள் என்னை சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வான்கடே தன்னுடைய புகாரில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் மிகவும் மரியாதைக்குரிய பொது செயல்பாட்டாளார்கள் மூலம் சிறைக்கு செல்லலாம் அல்லது பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று அச்சுறுத்தும் அழைப்புகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார் வான்கேடே. வான்கேடேவின் குற்றச்சாட்டுகள் குறித்து மும்பை காவல்துறை கருத்து கூற மறுத்துவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aryan Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment