டெல்லியில் வாகனத்தில் எருமைக் கன்றுகளை ஏற்றிச் சென்றதாக ஆறு பேரை தாக்கிய மர்ம கும்பலை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஹரிதாஸ் நகரில் சனிக்கிழமை வாகனங்களில் எருமைக் கன்றுகளை ஏற்றிச் சென்றதாக, அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, வாகனத்தில் இருந்த 6 பேரையும் தாக்கினர். அதுமட்டுமல்லாமல், அவர்களுடைய வாகனங்களையும் அந்த கும்பல் அழித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில கும்பலால் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்வதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் என அண்மையில் பிரதமர் மோடி கூறினார். ஆனால், அதற்குப் பின்பும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலைகளும், தாக்குதல்களும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் உள்ளன.