/tamil-ie/media/media_files/uploads/2022/12/sonia-meeting.jpg)
சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க மோடி அரசு பிடிவாதமாக மறுப்பது ஜனநாயகத்திற்கு அவமரியாதையைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பி.க்களிடம் கூறினார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை, நரேந்திர மோடி அரசாங்கத்தை உச்ச நீதிமன்றத்துடன் மோதலில் ஈடுபட்டதற்காகக் கடுமையாக சாடினார். மேலும், நீதித்துறையின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு திட்டமிடப்பட்ட முயற்சி நடந்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மீண்டும் மீண்டும் சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பா.ஜ.க அரசாங்கம் பிடிவாதமாக மறுப்பது ஜனநாயகத்திற்கு அவமரியாதையைக் காட்டுகிறது, அதன் நோக்கங்களை மோசமாகப் பிரதிபலிக்கிறது. தேசத்தை ஒன்றாக்குவதில் அதன் இயலாமையைக் காட்டுகிறது என்று கூறினார்.
“நீதித்துறையின் அதிகாரத்தை பறிப்பதற்கான திட்டமிட்ட முயற்சியானது ஒரு புதிய பிரச்சனைக்குரிய வளர்ச்சி. அமைச்சர்கள் மற்றும் உயர் அரசியலமைப்பு அதிகாரம் கூட - பல்வேறு காரணங்களுக்காக நீதித்துறையைத் தாக்கும் பேச்சுக்களுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது முன்னேற்றத்திற்கான நியாயமான பரிந்துரைகளை வழங்குவதற்கான முயற்சி அல்ல என்பது தெளிவாகிறது. மாறாக, பொதுமக்களின் பார்வையில் நீதித்துறையின் அந்தஸ்தைக் குறைக்கும் முயற்சி இது” என்று சோனியா காந்தி தனது கட்சி எம்.பி.க்களிடம் கூறினார்.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை மற்றும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகள் குறித்து சோனியா காந்தி கடுமையாக சாடினார். பணவீக்கம், வேலையின்மை, சமூகங்களுக்கு இடையேயான பகை, ஜனநாயக அமைப்புகளின் பலவீனம் மற்றும் மீண்டும் மீண்டும் எல்லை ஊடுருவல் போன்ற குறிப்பிடத்தக்க உள் மற்றும் வெளிப்புற சவால்களை இந்தியா தொடர்ந்து எதிர்கொள்கிறது என்று சோனியா காந்தி கூறினார்.
சீன ஆக்கிரமிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்காததற்காக சோனியா காந்தி பா.ஜ.க அரசாங்கத்தை கடுமையாக சாடினார். சீனாவின் தொடர்ச்சியான ஊடுருவல் தீவிர கவலைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.
“கடினமான சூழ்நிலையில் இந்தத் தாக்குதல்களை முறியடித்து விழிப்புடன் இருக்கும் நமது ராணுவ வீரர்களுடன் ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. இதன் விளைவாக, நாடாளுமன்றமும், அரசியல் கட்சிகளும், மக்களும் களத்தில் உள்ள உண்மை நிலையை அறியாமல் இருக்கின்றனர்” என்று சோனியா காந்தி கூறினார்.
“ஒரு முக்கியமான தேசிய சவாலை எதிர்கொள்ளும்போது நாடாளுமன்றத்தை நம்பிக்கைக்கு கொண்டுவருவது நம் நாட்டில் பாரம்பரியமாக உள்ளது. ஒரு விவாதம் பல முக்கியமான கேள்விகளுக்கு வெளிச்சத்தை தரலாம். சீனா ஏன் நம்மைத் தொடர்ந்து தாக்கத் துணிகிறது? இந்த தாக்குதல்களை முறியடிக்க என்ன ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் என்ன செய்ய வேண்டும்? எதிர்கால ஊடுருவலில் இருந்து சீனாவைத் தடுக்க அரசாங்கத்தின் கொள்கை என்ன? சீனாவுடன் கடுமையான வர்த்தகப் பற்றாக்குறையை நாம் தொடர்ந்து கொண்டிருப்பதால், நாம் ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறோம். சீனாவின் இராணுவ விரோதப் போக்கிற்கு ஏன் பொருளாதாரப் பதில் இல்லை? உலகளாவிய சமூகத்திற்கு அரசாங்கத்தின் ராஜதந்திர தொடர்பு என்ன?” என்று சோனியா காந்தி கூறினார்.
ஒரு வெளிப்படையான விவாதம், தேசத்தின் பொறுப்பை பலப்படுத்துகிறது என்று சோனியா காந்தி சுட்டிக்காட்டினார். பொது மக்களுக்குத் தெரிவிப்பதும், அரசின் கொள்கைகளையும் செயல்களையும் விளக்குவதும் இன்றைய அரசாங்கத்தின் கடமை என்று சோனியா காந்தி கூறினார்.
“இதுபோன்ற ஒரு தீவிர தேசிய அக்கறையின் மீது நாடாளுமன்ற விவாதத்தை அனுமதிக்க மறுப்பது - நமது ஜனநாயகத்திற்கு அவமரியாதையை காட்டுகிறது. அரசாங்கத்தின் நோக்கங்களை மோசமாக பிரதிபலிக்கிறது. இது தேசத்தை ஒன்றிணைப்பதில் அதன் இயலாமையைக் காட்டுகிறது” என்று சோனியா காந்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, “மாறாக, பிளவுபடுத்தும் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும், வெறுப்பைப் பரப்புவதன் மூலமும், நமது சமூகத்தின் சில பிரிவுகளை குறிவைப்பதன் மூலமும், வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை ஒன்றாக நிற்பதை அரசாங்கம் கடினமாக்குகிறது. இவ்வாறான பிரிவினைகள் நம்மை வலுவிழக்கச் செய்து மேலும் மேலும் பாதிப்படையச் செய்கின்றன. இதுபோன்ற சமயங்களில், கடந்த பல ஆண்டுகளாக செய்து வருவதைப் போல, நம் மக்களைப் பிளவுபடுத்தாமல், ஒன்றிணைப்பதே அரசாங்கத்தின் முயற்சியாகவும் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அரசாங்கம் பலமுறை வலியுறுத்தி கூறி வந்தாலும், பொருளாதார நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
“அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையானது தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருவது தொடர்கிறது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வழங்க இயலாமை இந்த அரசாங்கத்தின் ஒரு அம்சமாக உள்ளது” என்று சோனியா காந்தி கூறினார்.
பிரதமர் மோடி சில ஆயிரங்களுக்கான பணி நியமனக் கடிதங்களை வழங்கும்போது, இன்னும் கோடிக்கணக்கானவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. தேர்வுகள் நம்பகத்தன்மை அற்றவையாக இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன என்று கூறினார்.
“நாட்டில் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறு வணிகங்கள், பணமதிப்பு நீக்கம், மோசமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் கோவிட் தொற்றுநோய்க்கு தவறாக நிர்வகிக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியான அடிகளுக்குப் பிறகும் மீண்டு வருவதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் விலைவாசி உயர்வை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, உரங்கள், பயிர்களுக்கான நிச்சயமற்ற விலை, இவை அனைத்தும் அதிகரித்து வரும் சீரற்ற வானிலையால் மோசமாகிவிட்டன. இருப்பினும், மூன்று விவசாயச் சட்டங்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கான தவறான முயற்சிக்குப் பிறகு விவசாயிகள் இனி அரசாங்கத்தின் முன்னுரிமையைப் பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.
தீவிர கவலையான விஷயங்களில் மௌனம் சாதிப்பது பா.ஜ.க அரசின் ஆட்சிக் காலத்தை வரையறுக்கும் அம்சமாக மாறிவிட்டது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
“விவாதத்தைத் தடுக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சிகள் மற்றும் எந்தவொரு கேள்விக் குரல்களையும் குறிவைத்து, ஊடகங்களைக் கையாள்வதிலும், அவர்களின் வழியில் நிற்கும் நிறுவனங்களின் மதிப்பைக் குறைப்பதிலும் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது மத்தியில் மட்டுமில்லாமல், ஆளும் கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது,” என்று சோனியா காந்தி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.