”அங்கிள், என்னை மன்னித்துவிடுங்கள்! வேலை கிடைத்தவுடன் பணத்தை தருகிறேன்”: புறாக்களை திருடிய பள்ளி மாணவனின் கடிதம்

தன்னை மன்னித்து விடுமாறும், வேலை கிடைத்தவுடன் புறாக்களுக்கான பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் ஒருவர் புறாக்களின் உரிமையாளருக்கு கடிதம் அனுப்பினார்.

கேரளாவில் 10 புறாக்களை திருடிவிட்டு, தன்னை மன்னித்து விடுமாறும், வேலை கிடைத்தவுடன் புறாக்களுக்கான பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் ஒருவர் புறாக்களின் உரிமையாளருக்கு கடிதம் அனுப்பிய சம்பவம் நடைபெற்றது.

கேரளாவை சேர்ந்த பினு ஃபிலிப் என்பவர் அரிய வகை புறாக்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 10 அரிய வகை புறாக்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றார். திருடப்பட்ட புறாக்களின் மதிப்பு 48,000 ரூபாய் என பினு தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, பினு திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், புறாக்கள் திருடப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சென்ற இருவர் பினுவின் வீட்டில் பெட்டி ஒன்றை வைத்துவிட்டு உடனேயே அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அந்த பெட்டியில், திருடுப்போன புறாக்களும், அதனுடன் கடிதம் ஒன்றும் இருந்தது. அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது,

”அங்கிள், எனக்கு சாபம் இடாதீர்கள். என்னை மன்னித்து விடுங்கள். இந்த தவற்றை என் வாழ்க்கையில் முதன்முறையாக செய்கிறேன். இனிமேல் இத்தவற்றை செய்ய மாட்டேன். உங்கள் புறாக்களை எடுத்துக் கொண்டு சென்றதிலிருந்து என்னால் சரிவர படிக்க முடியவில்லை. என் அம்மாவும் என்னை திட்டினார். எனக்கு வேலை கிடைத்தவுடன் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்கிறேன்.”, என இருந்தது.

”அந்த கடிதம் நோட்டில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது. மேலும், இந்த கடிதத்தை எழுதியவர் ஏற்கனவே என் வீட்டுக்கு வந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இங்கு ஏற்கனவே வந்தவரென்றால் ஏதாவது பள்ளி மாணவராகத்தான் இருக்க வேண்டும். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்கள் யாரென தெரியவில்லை.”, என பினு The News Minute இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அந்த பெட்டியில் இருந்தது 5 அரிய வகை புறாக்கள் மற்றும் 4 சாதாரண புறாக்கள். 4 சாதாரணம் புறாக்கள் விரைவில் இறந்துவிடக் கூடியது என தெரிவிக்கும் பினு, புறாக்களின் இழப்பால் தனக்கு இன்னும் 25,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

×Close
×Close