கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள குப்பி காலனியில் உள்ள அம்மாநில பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சந்தன கவுடா பிரதார் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 24) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து வருமானத்திற்கு அதிகமான சொத்து ஆவணங்களும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லஞ்ச ஒழிப்பு துறை காவல் கண்காணிப்பாளர் (வடகிழக்கு பிரிவு) மகேஷ் மேகன்னானவர் தலைமையிலான குழு, நவம்பர் 24 காலை 7 மணியளவில் குப்பி காலனியில் உள்ள சந்தன கவுடா பிரதாரின் வீட்டில் சோதனையைத் தொடங்கினர். சந்தன கவுடா அம்மாநில அரசில் பொதுப்பணித்துறையில் ஜெவர்கி துணைப்பிரிவில் இளநிலை பொறியாளர் அதிகாரியாக உள்ளார்.
அவருடைய வீட்டில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து துல்லியமான தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அவருடைய வீட்டில் உள்ள பிவிசி பைப்பை உடைக்க பிளம்பர் ஒருவரை வரவழைத்தனர். வீட்டு குடிநீர் குழாய் பைப்பை உடைத்தபோது பைப்பில் இருந்து கட்டுக் கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். இந்த சோதனையில் குழாயில் மறைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் உட்பட, வீட்டில் இருந்த ரொக்கப் பணம் ரூ.40 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். ஒரு அதிகாரியின் வீட்டில் குழாயில் மறைத்து வைக்கப்பட்ட கட்டு கட்டான பணத்தைக் கண்டு சோதனை நடத்திய அதிகாரிகளே மலைத்துப் போயுள்ளனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கலபர்கியில் உள்ள குப்பி காலனியில் ஒரு வீடும், படேபூரில் ஒரு வீடும், பிரம்மபூரில் இரண்டு விடுகளூம், கொட்டானூர் D விரிவாக்கத்தில் 2 மனைகளும், யத்ராமி தாலுகாவில் உள்ள ஹங்கராகா கிராமத்தில் 35 ஏக்கர் விவசாய நிலங்களும், இரண்டு பண்ணை வீடுகளும் உள்ளன என்பதற்கான ஆவணங்கள் இந்த சோதனையில் கிடைத்துள்ளன என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் சொத்து மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
லஞ்ச ஒழிப்புத் துறையின் மற்றொரு குழு, பொதுப் பணித்துறை அதிகாரி சந்தன கவுடா பிரதாருக்கு சொந்தமாக ஹங்கராகாவில் உள்ள பண்ணை வீடுகளில் சோதனை நடத்தியது. ஆனால், இந்த சோதனையில் கைப்பற்றப் பட்ட பணம் ஆவணங்கள் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.
சந்தன கவுடா பிரதார் 1992ம் ஆண்டு கலபுர்கி ஜில்லா பஞ்சாயத்தின் பொறியியல் துறையில் தற்காலிக அடிப்படையில் இளநிலைப் பொறியாளராக பணியைத் தொடங்கினார். 2000ம் ஆண்டு நிரந்தரப் பணியாளராகப் பணியமர்த்தப்பட்டார். கலபுர்கி மாவட்டத்தில் உள்ள ஜெவர்கிக்கு, இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு கலபுர்கி மாவட்டத்தில் உள்ள ஆலந்திலும், விஜயபுரா மாவட்டத்தில் அல்மேலிலும் பணியாற்றியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”