ஒன்றரை அடி உயர குளியல் தொட்டியில் விழுந்து இறந்தாரா ஸ்ரீதேவி? விடை கிடைக்காத கேள்விகள்

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீதேவியின் மரணத்தில் நேற்று (26-ம் தேதி) புதிய திருப்பம் நிகழ்ந்தது. பிப்ரவரி 24-ம் தேதி இரவில் துபாயில் தங்கியிருந்த ஹோட்டலின் பாத்ரூமுக்கு சென்ற நிலையில் மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலை பகுப்பாய்வு செய்த பிறகு பிரேத பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று பிற்பகல் வெளியானது. உணர்வற்ற நிலையில் ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும், விபத்து போல இது நடந்திருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதை அடுத்து, அவரது உடல் எம்பால்மிங் செய்ய அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது உடல் நேற்று எம்பால்மிங் செய்யப்படவில்லை. சட்ட ரீதியிலான சிக்கல்கள் தீராததால் எம்பால்மிங் செய்வதில் தாமதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதேவி உடல் நேற்று மும்பை கொண்டு வரப்படவில்லை.

ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பு மது அருந்தியிருந்ததாகவும், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருப்பதாகவும் துபாயில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. எனவே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பேசப்படுகிறது. இது குறித்து அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையை பதிவு செய்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே ஸ்ரீதேவியின் மரணத்தில் விடை கிடைக்காத கேள்விகள் பல உள்ளன. பொதுவாக மருத்துவ அறிக்கைகள், ‘ஒருவர் காயம் காரணமாக இறந்திருக்கிறார்’ என்றோ, ‘மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்’ என்றோ இருக்கும். அந்தக் காயம், அவராக ஏற்படுத்தியதா, விபத்தா, வேறு யாரும் தாக்கியதால் ஏற்பட்டதா? என்பதை போலீஸ் விசாரணை அல்லது தடயங்கள்தான் தீர்மானிக்கும்.

அதேபோல ஸ்ரீதேவி நீரில் விழுந்து மூச்சுத் திணறலால் இறந்ததாக மருத்துவ அறிக்கை கூறுவதை ஏற்கலாம். ஆனால் அது தற்செயலாக நிகழ்ந்ததுபோல, ‘ஆக்சிடென்டல் டிரவுனிங்’ (எதிர்பாராத விதமாக நீரில் மூழ்குதல்) என தடயவியல் அறிக்கை எந்த அடிப்படையில் கூறுகிறது? என்பது பலருக்கும் புரியவில்லை.

ஸ்ரீதேவி தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் மருத்துவ வசதிகள் உண்டு. 24-ம் தேதி இரவு ஒன்பதரை மணி வாக்கில் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரவு 11 மணி வாக்கில்தான் இந்த விஷயம் வெளியே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டலின் மருத்துவ வசதியை ஏன் நாடவில்லை? என கேள்வி எழுப்பப்படுகிறது.

ஸ்ரீதேவி விழுந்த குளியல் தொட்டியின் ஆழம் ஒன்றரை அடிதான் என்கிறார்கள். ஐந்தடி உயரத்திற்கும் அதிகமான ஸ்ரீதேவி என்னதான் ஆல்கஹால் தாக்கத்தில் இருந்திருந்தாலும் அந்த சிறு தொட்டியில் விழுந்து பலியாகி இருக்க முடியுமா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. உடற் பயிற்சி, நீச்சல் பயிற்சி ஆகியவற்றை ரெகுலராக செய்யக்கூடியவர் ஸ்ரீதேவி என்பதையும் கவனிக்க வேண்டும்.

தற்போது எம்பால்மிங் செய்வதற்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீதேவியின் உடல் எப்போது இந்தியா வந்து சேரும் என்கிற எதிர்பார்ப்பே அனைவரிடமும் இருக்கிறது. ஒருவேளை இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அவரது மரணத்தின் மர்ம பக்கங்கள் அவிழ்க்கப்படலாம்.

 

×Close
×Close