இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தொற்று பாதிப்பு குறையவில்லை. சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவதர ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநிலங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நாட்டுமக்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மருத்துவ பணிகளுக்கு மட்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. தொழில்துறை தேவைகளுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை பற்றாக்குறை தீரும் வரை தள்ளிவைக்க மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், நேற்று, தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் உற்பத்தி கூடத்தில் தினசரி 500 டன் வரை ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்று அந்த மனுவில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசிடம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பதிலளித்த அரசு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் மருத்துவ தேவைகளுக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், அனுமதி வழங்கப்பட்டால் 6 நாட்களில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்று தெரிவித்தார்.
ஆனால் தமிழக அரசு சார்பில் இந்த இடைக்கால மனு மீது பதிலளிக்க உச்ச நீதிமன்றத்தில் அவசாகம் கோரப்பட்டது. எனவே வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை காப்பர் தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி ஆலையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதில் 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil