மகன் இறப்புக்குப் பின் மற்றவர்களுக்கு உணவளிப்பதற்காக மீண்டெழுந்த தம்பதிகள்

மும்பையை சேர்ந்த தம்பதிகள், தன் மகனின் இறப்புக்குப் பின் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்கி, தங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்தியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த தம்பதிகள், தன் மகனின் இறப்புக்குப் பின் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்கி, தங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்தியுள்ளனர்.

மஹராஷ்டிர மாநிலம், மும்பை நகரில் உள்ள முலுந்த் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி தன்னா. தமயந்தி அப்பகுதியில் சிறிய ஸ்நாக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், அவர்களுடைய 22 வயது மகன் நிமேஷ் ஒரு விபத்தில் இறந்துவிட்டதும் அத்தம்பதியினரின் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது.

”எனக்கும் என் கணவருக்கும் வாழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய்விட்டது. என் கணவர் வேலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டார். நான் என் கடையை மூடிவிட்டேன்.” என்கிறார் தமயந்தி. நாட்கள் செல்ல செல்ல தம்பதியர் இருவரும் வீட்டிலிருந்து வெளியே வருவதையே நிறுத்திவிட்டனர்.

“நாங்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என நினைத்தோம். ஆனால், இனிமேல் எங்களுக்காக நாங்கள் வாழ முடியாது என்ற நிலைமை வந்தவுடன், நாம் ஏன் மற்றவர்களுக்காக இந்த வாழ்க்கையை வாழக்கூடாது என நினைத்தேன். கடவுள் அளித்த இந்த வாழ்க்கையை ஏன் வீணாக்க வேண்டும்? நான் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு முழுமையாக துணை நிற்கிறேன் என என் கணவர் சொல்லிவிட்டார்.”, என தமயந்தி கூறினார்.

ஏற்கனவே உள்ள உணவு கடையை மீண்டும் திறந்ததுடன், மேற்கொண்டு இரண்டு உணவு கடைகளையும் ஆரம்பித்தனர்.

”சமூகத்தில் நலிந்தவர்களுக்கு அமைதியாக உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். இதற்காக என்னை யாரும் பாராட்ட வேண்டாம். நான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். இதற்காக, மற்றவர்கள் நிதியுதவியை எதிர்பார்க்க வேண்டாம் என என் கணவர் சொன்னார். அதன்பின், உணவில்லாதவர்களுக்கு இலவசமாக உணவளிக்க துவங்கினோம்.”, என தமயந்தி தன் மறுவாழ்வு குறித்து சொல்கிறார்.

தமயந்தி, தன் மகனின் நண்பர்களின் உதவியை நாடினார். உணவில்லாதவர்களை அடையாளம் காண அவர்கள் உதவினர்.

“உணவில்லாதவர்களுக்கு நாங்கள் தினந்தோறும் மதிய உணவை இலவசமாக வழங்குகிறோம். பலரும் மற்றவர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தி இங்கு அழைத்து வருகின்றனர். அவர்கள் குறித்து எங்களிடம் கூறுகின்றனர்.”, என்கிறார் தமயந்தி.

ஆரம்பத்தில் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும் உதவிய இத்தம்பதிகள், தற்போது ஸ்ரீ நிமேஷ் தன்னா அறக்கட்டளை என தங்கள் மகனின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து பலருக்கும் உணவளித்து வருகின்றனர். உணவு மட்டுமல்லாது மக்களின் அடிப்படை தேவைகளையும் இந்த அறக்கட்டளை மூலம் இவர்கள் நிறைவேற்றுகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close