தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (மே 18) வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல கட்டப் பேராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வழிவகை செய்தது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் விலக்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது, ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்றும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பை வாசித்து நீதிபதிகள் கூறுகையில், சட்டமன்றத்தின் பார்வையை நாங்கள் சீர்குலைக்க மாட்டோம். மேலும் இது மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று சட்டமன்றம் கருதுகிறது. மேலும் இது தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஜல்லிகட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பிறகு நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. விலங்குகள் குறித்தான தீர்மானும் பொருத்தமாக உள்ளது. எனவே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறி தீர்ப்பளித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“