லோக்பால் சட்டம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இனி இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது

உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், “லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை தாமதம் செய்யக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.

லோகபால் சட்டம் என்றால் என்ன?

அரசு ஊழியர்கள் யாரேனும் ஊழலில் ஈடுபடுவது மக்களுக்கு தெரிந்தால், அவர்கள் உடனே புகார் அளிக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, அந்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கக்கூடிய அதிகாரம் ‘லோகபால்’, ‘லோக் ஆயுக்தா’ ஆகிய அமைப்புகளுக்கு உள்ளது. இந்த அமைப்பின் தலைவர்களை நியமிக்க, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்க வேண்டும் என்பதே லோக்பால் சட்ட அமைப்பின் விதியாகும்.

இந்த இரு அமைப்புகளுக்கான பதவிகளை உருவாக்க, 2014-ல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இச்சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவதில், மத்திய அரசு கால தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

உச்ச நீதிமன்ற எச்சரிக்கை:

இந்த வழக்குகளுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு கூறிய விளக்கத்தில், ‘லோக்ஆயுக்தா சட்டப்படி, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுக்குழுவில் இடம்பெற வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், லோக்பால் சட்டத்தை அமல்படுத்த முடியாது’ என்று கூறியிருந்தது.

இந்நிலையில், லோக்பால் தொடர்பான வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், “ஊழலை ஒழிக்க வகைசெய்யும் லோக்பால் சட்டத்தை, மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இனி இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசு எந்த விளக்கமும் அளிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளது.

×Close
×Close