காவிரி விவகாரம்: டெல்லியில் தொடர் போராட்டம் தொடங்கிய தமிழக விவசாயிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டெல்லி பாராளுமன்ற சாலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.

டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் கடந்த ஏப்ரல் மாதம் 41 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீடை 14 டி.எம்.சி குறைத்தது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின் இதர அம்சங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான காலக்கெடு வருகிற 29-ந்தேதி முடிகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை குழுவை அமைக்க முடிவு செய்தது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 150 விவசாயிகள் டெல்லி சென்றனர். முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி அங்கு இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுகிறர்கள். இதற்காக நேற்று முன்தினம் 150 விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று காலை டெல்லி பாராளுமன்ற சாலையில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். கோரிக்கை நிறைவேறும் வரை பிரதமர் வீடு முற்றுகை, பாராளுமன்றம் முற்றுகை, ஜனாதிபதி மாளிகை முற்றுகை என தினமும் நூதன போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close