Advertisment

எல்லையில் இதுவரை இல்லாத அளவு ராணுவம் குவிப்பு; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு ஜெய்சங்கர் பதில்

சீன எல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ராணுவம் தற்போது குவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து பெருமளவில் அதிகரிக்கப்பட்ட சீனப் படையெடுப்பை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - ஜெய்சங்கர்

author-image
WebDesk
New Update
எல்லையில் இதுவரை இல்லாத அளவு ராணுவம் குவிப்பு; எதிர்கட்சிகள் விமர்சனங்களுக்கு ஜெய்சங்கர் பதில்

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் டிசம்பர் 9-ம் தேதி இந்திய- சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிலையில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி) வழியாக ஒருதலைப்பட்சமாக சீனா தனது நிலையை மாற்ற இந்திய ராணுவம் அனுமதிக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திங்களன்று தெரிவித்தார். மேலும், இந்திய துருப்புக்களின் அதிகப்படியான நிலைநிறுத்தம் "இதற்கு முன் எப்போதும் இல்லாதது" என்றும் அவர் கூறினார்.

Advertisment

பி.டி.ஐ செய்தியின்படி, இந்தியா டுடேயின் இந்தியா- ஜப்பான் மாநாட்டில் ஜெய்சங்கர் பேசுகையில், "இது இந்திய அரசின் கடமை என்று நான் கூறுகிறேன், அது இந்திய இராணுவத்தின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு, நாங்கள் எந்த நாட்டையும் எல்லையை மீற அனுமதிக்க மாட்டோம் மற்றும் இந்த விஷயத்தில் சீனா, LAC ஐ ஒருதலைப்பட்சமாக மாற்றவும் அனுமதிக்க மாட்டோம்,” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: விழிஞ்சம் துறைமுகத்திற்கு பின், அடுத்த போராட்டத்தை கையில் எடுத்த கேரள கத்தோலிக்க திருச்சபை

”சீன எல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய ராணுவம் தற்போது குவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலிருந்து பெருமளவில் அதிகரிக்கப்பட்ட சீனப் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று ஜெய்சங்கர் மேற்கோள் காட்டினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நிராகரித்த ஜெய்சங்கர், “நாங்கள் மறுப்பு தெரிவித்திருந்தால், ராணுவம் எப்படி அங்கு இருக்க முடியும்? ராகுல் காந்தி அவர்களை போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை. இந்தியப் பிரதமர் அவர்களைப் போகச் சொன்னதால் ராணுவம் அங்கு சென்றது... எல்.ஏ.சியை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் இன்று களமிறங்கியுள்ளது என்பதே உண்மை,” என்று கூறினார்.

பின்னர், சீனப் படைகள் "நமது ஜவான்களை தாக்குகிறார்கள்" என்று ராகுல் காந்தி கூறியதற்கு ஜெய்சங்கர் மக்களவையில் பதில் அளித்தார். “நமது வீரர்களுக்கு ‘பிடாய்’ (தாக்குதல்) என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அவர்கள் களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும், அவர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் பாராட்டப்பட வேண்டும். இது ஏற்புடையது அல்ல,'' என்று ஜெய்சங்கர் கூறினார்.

“ஜவான்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாம் விமர்சிக்கக் கூடாது. நமது வீரர்கள் யாங்ட்சேயில் 13,000 அடி உயரத்தில் நின்று நமது எல்லைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் ‘பிடாய்’ என்ற வார்த்தைக்கு தகுதியானவர்கள் அல்ல, ”என்று கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2019 மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறினார்.

அரசாங்கம் சீனாவைப் பற்றி அலட்சியமாக உள்ளது என்ற எதிர்க்கட்சியின் கருத்துக்களுக்கு, “சீனாவைப் பற்றி நாம் அலட்சியமாக இருந்தால், இந்திய இராணுவத்தை எல்லைகளுக்கு அனுப்பியது யார்? இன்று நாம் ஏன் சீனாவுக்கு பிரச்சனையை துண்டிக்க வேண்டும் மற்றும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறோம்? நமது உறவுகள் இயல்பானவை அல்ல என்று ஏன் பகிரங்கமாகச் சொல்கிறோம்?,” என்று மீண்டும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

அவரது கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜெய்சங்கர் கூறினார்: “அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் விமர்சனங்கள் இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நமது ராணுவ வீரர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.”

கடந்த வாரம் ஜெய்ப்பூரில் பேசிய ராகுல் காந்தி, “சீனா அச்சுறுத்தலை” அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். சீனாவைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி, சீனா இந்தியாவின் 2,000 சதுர கிலோமீட்டர்களை எடுத்துக் கொண்டுள்ளது, 20 இந்திய வீரர்கள் தியாகம் செய்துள்ளனர், அருணாச்சல பிரதேசத்தில் நமது ஜவான்களை சீனா தாக்கி வருகிறது, என்று கூறினார்.

“...சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. அரசு அதை மறைக்க முயல்கிறது, புறக்கணிக்கிறது. ஆனால் அச்சுறுத்தலை மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது” என்று ராகுல் காந்தி கூறினார். "இது ஒரு முழுமையான தாக்குதலுக்கான தயாரிப்பு. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கேட்க விரும்பவில்லை, ஆனால் அவர்கள் (சீனா) ஊடுருவலுக்கு அல்ல, போருக்காகத் தயாராகி வருகின்றனர்,” என்று ராகுல் காந்தி கூறினார்.

ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல் காந்தி, அவர் தொடர்ந்து கருத்துக்களை வெளியிடுகிறார், ஆனால் "அவரது புரிதலை ஆழப்படுத்த வேண்டும்" என்று கூறினார். இதற்கு பதிலளித்த, ஜெய்சங்கர், “எனது சொந்த புரிதலை ஆழப்படுத்த வேண்டும் என்று கேள்விப்பட்டேன். யார் அறிவுரை கூறுகிறார்கள் என்று தெரிந்தால், நான் பணிந்து மரியாதை செய்ய முடியும்,” என்று கூறினார்.

இந்தியாவின் G20 தலைவர் பதவிக்கான அரசாங்கத்தின் கொண்டாட்டங்கள் பற்றிய காங்கிரஸின் விமர்சனத்தையும் ஜெய்சங்கர் ஏற்கவில்லை. உலகமே இந்தியத் தலைமையை எதிர்பார்க்கும் தருணம் இது. இந்தியாவின் தலைமையை உலகம் மதிக்கும் போது. ஏதோ சுழற்சி முறையில் கிடைத்ததால், நீங்கள் மதிக்கப்படவில்லை என்று அர்த்தமல்ல, ”என்று ஜெய்சங்கர் கூறினார்.

விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ”ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைப் பதவி “ஒரு தனிநபரையும் அரசாங்கத்தையும் கவர்வதற்காகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த வகையான பிரச்சாரத்தின் முக்கியத்துவம் எனக்குத் தெரியாது, ஏனெனில்... சுழற்சி முறையில் G20 ஐ நடத்துவதற்கு நாம் ஒப்படைக்கப்பட்டுள்ளோம்," என்று கூறினார்.

இதற்கிடையில், சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்களவை தலைவர் நிராகரித்ததையடுத்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.

பின்னர் சீனா விவகாரத்தை எழுப்பிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாலியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியபோது எல்லை நிலவரம் குறித்து விவாதித்தார்களா என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

மானியத்திற்கான துணைக் கோரிக்கையில் எல்லைச் சாலைகளுக்கு கூடுதலாக ரூ. 500 கோடி கோரப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டிய ப.சிதம்பரம், “இவை வடகிழக்கில் உள்ள வியூக மற்றும் எல்லைச் சாலைகள்,” என்று கூறினார். “வடக்கு மற்றும் கிழக்கு எல்லையில் அச்சுறுத்தல் யார் என்பது எங்களுக்குத் தெரியும். ஹாட் ஸ்பிரிங்ஸ் விஷயத்தில் சீனா ஏதாவது ஒப்புக்கொண்டதா? டோக்லாம் சந்திப்பு மற்றும் டெப்சாங் சமவெளியில் உள்ள மோதல் புள்ளிகளைப் பற்றி விவாதிக்க சீனர்கள் ஒப்புக்கொண்டார்களா?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

தவாங் மோதல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தானாக முன்வந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், "சீன துருப்புக்கள் தவாங் செக்டாரின் யாங்சே பகுதியில் எல்.ஏ.சி.,யை மீறி ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர்", "இரு தரப்பிலும் ஒரு சில வீரர்களுக்கு காயங்கள்" ஏற்பட்டது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

"சீன துருப்புகள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்ததுடன், அவர்களைத் தங்கள் நிலைகளுக்குத் திரும்பும்படி நிர்ப்பந்தித்தது" மேலும் "இராஜதந்திர வழிகள் மூலம் சீனத் தரப்பிலும் பிரச்சினை எடுக்கப்பட்டுள்ளது" என்று ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திங்களன்று அல்வாரில், எதிர்க்கட்சிகள் எல்லை நிலைமை குறித்து விவாதிக்க விரும்புகின்றன, ஆனால் பா.ஜ.க அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை. “அவர்கள் (பாஜக தலைமையிலான அரசு) வெளியே சிங்கம் போல பேசுகிறார்கள், ஆனால் அவர்களின் செயல்களைப் பார்த்தால், எலியைப் போல இருக்கிறது. இந்த பிரச்சினை விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்… ஆனால் அவர்கள் இன்னும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு தயாராக இல்லை, ”என்று கூறினார்.

கூடுதல் தகவல்கள் : PTI

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment