சீருடை அணியாததால் பள்ளியில் தண்டனையாக மாணவர்கள் கழிவறை அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிறுத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சனிக்கிழமையன்று பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்றுள்ளார். இதனைக் கண்ட அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை, அந்த மாணவியை மாணவர்களின் அருகே நிற்குமாறு தண்டனை வழங்கியுள்ளார்.
தண்டனையை ஏற்றுக் கொண்ட அந்த மாணவி மாணவர்களின் கழிவறை அருகே நின்றுள்ளார். கழிவறையை உபயோகிக்க வந்த மாணவர்கள், அந்த மாணவியை கிண்டல் அடித்துச் சென்றுள்ளனர். இதனால் அந்த மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
தொடர்ந்து, வீட்டிற்கு வந்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததுடன் பள்ளிக்கு மீண்டும் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, நேற்றைய தினம் பள்ளிக்கு வந்த மாணவியின் பெற்றோர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.