சபரிமலை விவகாரம் : கோவிலுக்குள் நுழையும் பெண்களை வெட்ட வேண்டும் என்று கூறிய நடிகர் மீது வழக்கு பதிவு

கேரள பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில் சர்ச்சையாக பேசியதால் பரபரப்பு

சபரிமலை விவகாரம் கொல்லம் துளசி சர்ச்சைப் பேச்சு : கேரளாவின் பிரசித்தி பெற்ற புனித வழிபாட்டுத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வகையான பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.

சபரிமலை விவகாரம் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஐவர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது. ஆனால் இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பினை முன் வைத்தார். அது தொடர்பான செய்தியைப் படிக்க

இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் மனுக்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்திருக்கிறது. மேலும் பந்தளம் ராஜ குடும்பத்தினர் பொதுமக்களை ஒன்று திரட்டி, குறிப்பாக பெண்களை, வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மறு சீராய்வு மனுக்கள் தொடர்பான கட்டுரையை படிக்க

ஆனால் கேரள அரசோ, மேல் முறையீட்டு மனு என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக சபரிமலை செல்லவிரும்பும் பெண்களுக்கு உயரிய பாதுகாப்பினை கேரள அரசு உறுதி செய்யும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் அப்பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்க அண்டை மாநிலங்களில் இருந்து பெண் காவல்துறையினரை உதவிக்கு அழைப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பான முழுமையான செய்தியினைப் படிக்க

சபரிமலை விவகாரம் கொல்லம் துளசி சர்ச்சைப் பேச்சு

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொல்லம் பகுதியில் இருக்கும் குந்த்ரா தொகுதியின் பாஜக கட்சியின் வேட்பாளராக நின்றவர் நடிகர் கொல்லம் துளசி. நேற்று கேரள பாஜக மாநிலத்தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில் நிகழ்ச்சி ஒன்று கொல்லத்தில் நடைபெற்றது. அதில் கொல்லம் துளசி அவர்களும் பங்கேற்றார்.

அப்போது அந்த பொதுக்கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்களைப் பார்த்து “நீங்கள் சபரிமலை செல்வீர்கள். உங்களைப் பார்த்து இன்னும் சிலர் செல்வார்கள். கோவிலுக்குள் நுழைய முற்படும் பெண்களை இரண்டாக வெட்டி, ஒரு பகுதியை டெல்லிக்கும் மற்றொரு பகுதியை கேரள முதலமைச்சர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் எனக்கு தெரியும் நீங்கள் யாரும் அங்கு செல்லமாட்டீர்கள். நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், சூழ்நிலையை உணர்ந்தவர்கள்” என அச்சுறுத்தும் தொணியில் பேசினார்.

மேலும் அங்கிருக்கும் பெண்கள் அனைவரையும் கேரள முதலமைச்சர் காதில் படுமாறு ஐயப்பன் கீர்த்தனையை பாடுங்கள் என்றும், அந்த சத்தம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் முட்டாள்கள் காதுகளுக்கு விழும்படி பாடுங்கள்” என்றும் சர்ச்சையான முறையில் பேசியிருக்கிறார். அவரின் பேச்சை தொடர்ந்து இன்று டி.ஒய்.எஃப்.ஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் கொல்லம் துளசியின் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close