தஞ்சாவூரில் 17 வயது மாணவி கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “பரிசுகள், பணப் பலன்கள் அளிப்பதாக கூறி ஏமாற்றி, மிரட்டல் விடுப்பதன் மூலம் மோசடியாக மத மாற்றம் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும். பரிசுப் பொருள்கள் அளிப்பது, அல்லது மிரட்டல் விடுப்பது ஆகிய நேர்மையற்ற முறையால் மதமாற்றம் இல்லாத ஒரு மாவட்டம்கூட இல்லை என்பதால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஒவ்வொரு வாரமும், மிரட்டல் மூலமாகவும் பரிசுகள் அளிப்பதாக ஏமாற்றியும் பணப் பலன்கள் மூலமாகவும், சூனியம், மூடநம்பிக்கை, அற்புதங்கள் செய்வதாகக் கூறியும் மதமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அச்சுறுத்தலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
மாநில மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் மோசடியாக மதமாற்றம் செய்தல், மதமாற்றம் செய்ய வற்புறுத்துதல், மதமாற்றத்தை தூண்டுதல் ஆகியவற்றை துல்லியமாக வரையறுக்காததால், நடைமுறை ரீதியாக அமல்படுத்துவதற்கு மதமாற்றம் குறித்த தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதமாற்றம் இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்றும், அதற்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. “பல தனிநபர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பின்னால், செயல்படுவதால், இந்த சட்டம் வெளிநாட்டு நிதிகள் மீது ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தேசிய பேரிடர்களின் போது வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் விதிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி இன்று மேல்முறையீடு செய்துள்ளார். மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில், தமிழக டிஜிபி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"