இவர்தான் நிஜ ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’: இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளரின் கடும் சவாலான அனுபவங்கள்

துப்பறிவாளர்கள் என்றவுடன் ஆண்களின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஞ்சனி பண்டிட்

துப்பறியும் கதைகள் பலவற்றை ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களில் படித்திருப்போம். உண்மையிலேயே அத்தகைய துப்பறிவாளர்கள் மிக சொற்பமாகத்தான் இந்தியாவில் இருக்கிறார்கள். அதிலும், துப்பறிவாளர்கள் என்றவுடன் ஆண்களின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஞ்சனி பண்டிட் பற்றி உங்களுக்கு தெரியுமா? மிகவும் சவாலான இந்த பணியை வெற்றிகரமாக இன்றளவும் மேற்கொண்டு வருகிறார்.

1983-ஆம் ஆண்டிலிருந்து துப்பறிவாளராக இருந்துவருகிறார். ஆரம்பத்தில் துப்பறியும் பணி என்றால் என்ன என்பது அவருக்கே தெரியாது. இப்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சுவாரஸ்யமான, ஆனால் கடும் சவால்கள் நிரம்பிய இந்த பணியில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். ரஞ்சனி பண்டிட் டிடெக்டிவ் சர்வீஸஸ் என்ற பெயரிலான நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் துப்பறியும் பணியை மேற்கொள்கிறார்.

இவருடைய தந்தை சாந்தாராம் பண்டிட், மும்பை காவல் துறையில் குற்ற வழக்குகளின் விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர். அதனால், இயல்பாகவே ரஞ்சனிக்கு குற்றங்களின் பின்னணி குறித்து ஆராயும் குணம் இருந்தது. அந்த வழக்குகளின் பின்னணி குறித்தும், ஏன் குற்றங்களுக்கு நேரடியாக காவல் துறையினரால் தண்டனை வழங்க முடிவதில்லை என்பது குறித்தும் அவர் தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருகட்டத்தில், தான் துப்பறிவாளராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது ரஞ்சனிக்கு. அவருக்கு, கவனம், உற்றுநோக்கல், கடின உழைப்பு, போராட்டம், அர்ப்பணிப்பு, எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆகியன இருந்தன.

திருமணத்திற்கு முன்பும், பின்பும், ஜோடிகளுக்குள் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவே அதிகம் ரஞ்சனியை நாடி வருகின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் சந்தேகங்கள் என்னவென அறிந்து, அது உண்மையா, இல்லையா என கண்டறிந்து, அவர்களுக்குள் பிரச்சனையை தீர்ப்பதில் ரஞ்சனி நிபுணராக செயல்படுகிறார்.

தற்போது மும்பையில் 20 பேர் கொண்ட குழுவினருடன் துப்பறியும் பணியை தொடர்ந்துவருகிறார். 75,000 வழக்குகளை இதுவரை தீர்த்திருக்கிறார். தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் இவரின் வாடிக்கையாளர்கள்தான்.

பணிப்பெண், பார்வையற்ற பெண், கர்ப்பிணி பெண், தெருவோர வியாபாரி என பல மாறுவேடங்களில் இந்த துப்புரவு பணியை மேற்கொள்ளும் ரஞ்சனி, அலுவலகத்தில் இருப்பதுபோல் வெளியிடங்களிலும் இருக்க மாட்டார். வெளியிடங்களில் அவரை கண்டறிவதே கடினம்.

இதுவரை 2 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மேலும், 57 விருதுகள் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரியான சவாலான பணிகளில் தைரியம் இருந்தால் பெண்கள் நம்பிக்கையுடன் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் ரஞ்சனி.

×Close
×Close