பேட் மேன் தெரியும்; அது யார் இந்தியாவின் பேட் வுமன்?

தனது சேமிப்பு பணம் மற்றும் அமெரிக்க நண்பர்களின் உதவியோடு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கியுள்ளார்

மாதவிலக்கு நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம். இவரின் சாதனையைப் பாராட்டிய மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கெளரவித்தது. விருதுக்குப் பின்னரே அவர் இந்தியாவின் கவனிப்பைப் பெற்றார். ஊடக கவனிப்பும் அப்போதுதான் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக ‘பேட்மேன்’ எனும் பெயரில் திரைப்படமாக பாலிவுட்டில் உருவாகி விரைவில் ரிலீசாக உள்ளது. இதில், அக்ஷய குமார் நடித்துள்ளார். நாடு முழுவதும் பல பிரபலங்கள் நாப்கின்னுடன் போஸ் கொடுத்து, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் பேட்வுமன் என்று ஒருவர் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மாயா விஷ்வகர்மா என்ற பெண்ணிற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு கை நிறைய சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை கிடைத்து, அவரும் அங்கு சென்றுவிட்டார். அதற்கு பின் மீண்டும் இந்தியா திரும்பிய மாயா, கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதை அறிந்து, தனது அமெரிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குறைந்த விலையில் நாப்கின் தயாரித்து ஏழை பெண்களுக்கு வழங்கியிருக்கிறார்.

இதற்காக தனது சேமிப்பு பணம் மற்றும் அமெரிக்க நண்பர்களின் உதவியோடு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி, அதன் மூலம் அதிக தரத்தோடு கூடிய நாப்கின்களை தயாரித்து குறைந்த விலைக்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் குறித்த பல விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்தி உள்ளார்.

இதனால், இவரை ‘பேட் வுமன்’ என்றே அனைவரும் அழைக்கிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close