நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையின் இந்தியாவின் அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை திருமூர்த்தி புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக உள்ள சையது அக்பருதீன் இந்த மாதத்துடன் ஒய்வுபெற உள்ளதால், அவருக்கு பதிலாக அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வெளியுறவு அதிகாரியான திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருமூர்த்தி 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச்சில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தற்போது மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையில் செயலாளராக உள்ளார்.
இந்திய வெளியுறவு அதிகாரியான திருமூர்த்தி சென்னையைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி கவுரி. இவர் முன்னாள் டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் மகள். திருமூர்த்தியின் மனைவி கவுரி 1982-ம் ஆண்டில் இந்திய தேசிய ஜூனியர்ஸ் சாம்பியனாக இருந்தார். அவர்களின் மகள் பவானி திருமூர்த்தியும் டென்னிஸ் வீரராக உள்ளார்.
திருமூர்த்தி அண்மையில் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களில் முக்கிய பங்கு வகித்தார். அவர் இதற்கு முன்பு, ஜெனீவாவில் நிரந்தர பணி மற்றும் வெளியுறவு செயலாளர் அலுவலகத்தில் இயக்குனர் மற்றும் இணை செயலாளர் (ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக) பணியில் இருந்தார்.
அதே போல, நேற்றைய அறிவிப்பில், 1998-ம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியும், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – ஈரான் நாடுகளின் இணை செயலாளருமான தீபக் மிட்டல் கத்தார் நாட்டின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு புல்வாமாவில் நடந்த தற்கொலைத் தாக்குதல் மற்றும் கர்த்தார்பூர் பகுதியைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் கையாள்வதில் முக்கிய பங்கு வகித்த மிட்டல், விரைவில் தனது பணியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் நாட்டின் தற்போது இந்திய தூதராக உள்ள பி குமரன் சிங்கப்பூருக்கான புதிய துணை தூதராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இஸ்தான்புல்லில் இந்தியாவின் துணைத் தூதராக இருக்கும் ஜே.பி.சிங், இஸ்லாமாபாத்தில் துணை பணியாற்றியுள்ளதால், மிட்டலுக்கு பதிலாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் நாட்டு பணிக்கு மாற்றம் செய்யப்படுவார் என்று கருதப்படுகிறது.