கர்நாடக சிவக்குமார சுவாமி மரணம்... மூன்று நாள் துக்கம் அனுசரிப்பு...

நுரையீரல் தொற்று காரணமாக தன்னுடைய 111வது வயதில் மரணம்...

Tumakuru Shivakumara Swami passed away : கர்நாடக மாநிலத்தின் நடமாடும் கடவுள் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் லிங்காயத்து வீரசைவ மரபுகளை பின்பற்றி வருபவர் சிவக்குமார சுவாமி.  கர்நாடகாவில் இருக்கும் சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் தன்னுடைய 111வது வயதில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்று நாட்களை துக்க நாளாக அனுசரிக்க கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.  நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த இவரின் இறுதி சடங்குகள் நாளை மாலை 04:30 மணிக்கு நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் எச்.டி. குமாரசுவாமி அறிவித்துள்ளார்.

பத்ம பூஷன் விருது பெற்ற சிவக்குமார சுவாமி

கர்நாடக மாநிலம் ராமநகராவில் 1907ம் ஆண்டு, வீரபூரா என்ற ஊரில் பிறந்தார். இவர் மக்களுக்கு செய்த சமூக சேவைகளுக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதினை 2015ம் ஆண்டு இந்திய அரசு வழங்கி சிறப்பு செய்தது.

2007ம் ஆண்டு கர்நாடகா ரத்னா என்ற விருதினை கர்நாடக அரசு வழங்கியது. 1965ம் ஆண்டு கர்நாடகா பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.  ஸ்ரீ சித்தகங்கா எஜூகேஷன் சொசைட்டி என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுமார் 125 கல்வி நிலையங்களை நடத்தி வந்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளில் பங்கு வகிக்கும் முக்கியமான அரசியல் பிரமுகர்கள் இவரின் ஆலோசனைகளை கேட்க அடிக்கடி இவரை சந்திப்பது வழக்கம்.

இது தொடர்பான முழுமையான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க

தலைவர்கள் அஞ்சலி

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிவக்குமாரின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய கல்வி மற்றும் சுகாதாரத் துறை சேவைகள் குறித்து பெருமைப் பட குறிப்பிட்ட ராம்நாத், சிவக்குமாராவின் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு தன்னுடைய இரங்கலையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி “நான் அவரை நேரில் சந்தித்ததை பெரும் பாக்கியமாக உணர்கின்றேன். யூகித்தும் அறிந்திடாத அளவிற்கு அவருடைய சேவைகள் இங்கு முக்கிய அங்கம் வகிக்கின்றன” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இரங்கல் செய்தி

ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சுவாமிஜியின் மரணம் செய்தி கேட்டு மிகவும் வருத்ததில் உள்ளேன். சாதி மதம் கடந்து  லட்சோப லட்ச இந்தியர்களால் பின்பற்றப் படுகின்ற ஒரு ஆன்மீகவாதி இவர். இவரின் மரணம் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இவரின் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close