சிறுமி பலாத்கார வழக்கு: இரு அமைச்சர்கள் ராஜினாமா!

பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் முழுஆதரவு அளித்தனர்

கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் கலந்துகொண்ட இரண்டு பாஜக அமைச்சர்கள் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு பதவி விலகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த எதிர்ப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, காஷ்மீர் கதுவா மற்றும் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் சம்பவங்கள் தேசத்திற்கு அவமானத்தை தேடித்தந்துள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மன்ச் என்ற அமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் முழுஆதரவு அளித்தனர். பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பலாத்கார வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் இரு அமைச்சர்களும் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சாத் சர்மா கூறியபோது, “இரு அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக என்னிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close